பாப்புவாவிலிருந்து இராணுவத்தைத் திரும்பப் பெறவேண்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி பாப்புவாவிலிருந்து இராணுவத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்றும், அவற்றின் இருப்பு இடம்பெயர்ந்தவர்களை கிறிஸ்துமஸ் விழாவிற்கு முன்னதாக தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதைத் தடுக்கிறது என்றும் இந்தோனேசியாவின் ஆயர் Yanuarius Matopai you அவர்கள் கூறியுள்ளதாகத் தெரிவிக்கிறது யூக்கான் செய்தி நிறுவனம்.
உடனடியாக ஒக்ஸாப் மாவட்டத்தில் இருந்து இராணுவப் படைகளை விலக்கி, பொதுமக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் தூண்டக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துங்கள் என்று ஜெயபுராவின் ஆயர் மாத்தோபாய் யூ அவர்கள், டிசம்பர் 16, இத்திங்களன்று அறிக்கையொன்றில் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கிறது அச்செய்தி நிறுவனம்.
டிசம்பர் 11, கடந்த புதனன்று, பெகுனுங்கன் பிந்தாங் காவல் துறைத் தலைவர் ஆன்டோ செவன், ஒக்சோப்பில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட திரும்பி வருவதற்கு ஏற்றதாக சூழல் இருப்பதாகக் கூறியபோதிலும் அதனை ஆயர் மறுத்துள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பு உரைக்கின்றது.
நாங்கள் சேகரித்த தரவுகளின்படி, புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 401 பேரை எட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், இடம்பெயர்ந்தவர்களில் இரண்டு மாதங்கள் முதல் 12 வயதுக்குட்பட்ட 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளும், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் உட்பட 115 பெண்களும் அடங்குவர் என்றும் ஆயர் தெரிவித்துள்ளதாகவும் அச்செய்தி நிறுவனம் மேலும் கூறுகின்றது.
புலம்பெயர்ந்தோர் திரும்பி வருவதற்கு பாதுகாப்பு மற்றும் உதவி வழங்குமாறு பெகுனுங்கன் பிண்டாங் அரசிடம் விண்ணப்பித்துள்ள ஆயர், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் குறிப்பிடுகிறது.
மேலும் TPN-PB அமைப்புகளை, வன்முறை செயல்களில் இருந்து விலகி அமைதியான தீர்வைக் காண பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் எனவும் அச்செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
பாப்புவா மக்கள் தங்கள் பகுதியை இந்தோனேசிய கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க விரும்புகிறார்கள், ஆனால் இந்தோனேசியா அதை இராணுவ ரீதியாக ஒடுக்கப் பார்க்கிறது. இதற்குக் காரணம், இப்பகுதியில் இயற்கை எரிவாயு, கனிமங்கள், மரம், பாமாயில் ஆகியவற்றின் விரிவான ஆதாரங்களைக் கொண்ட பெரிய தங்கச் சுரங்கங்கள் உள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்