தேடுதல்

புலம்பெயரும் மக்கள் புலம்பெயரும் மக்கள்  (AFP or licensors)

மியான்மாரில் போரால் துயருறும் கிறிஸ்தவம்!

அருள்பணியாளர் Bernardino Ne Ne, உட்பட இன்னும் பல அருள்பணியாளர்கள் முகாம்களில் புலம்பெயர்ந்தோர் மத்தியில் வாழ்வதன் மூலம் அவர்களுக்கு ஆன்மிக ஆதரவையும் நம்பிக்கையையும் வழங்குகிறார்கள் : Fides செய்தி நிறுவனம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மியான்மாரின் காயா மாநிலத்தில் ஆயிரங்கணக்கானோர் புலம்பெயர்ந்தோராக உள்ளனர் என்றும், தற்போது உள்நாட்டில் அதிலும் குறிப்பாக, சின், மாக்வே மற்றும் ஸகைங் பகுதிகளில். 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் காடுகளிலும் புலம்பெயர்ந்தோர் முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றனர் என்றும், அருள்பணியாளர் Bernardino Ne Ne கூறியுள்ளதாக Fides செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காயா மாநிலத்தின் தலைநகர் லொய்காவில் இருந்து வந்த அருள்பணியாளர் Ne Ne அவர்கள், யங்கூனில் வாழ்க்கை சீராகவே செல்கின்றது, ஆனால் அரசியல் விவகாரங்களை விவாதிப்பதற்கோ அல்லது ஆட்சியை விமர்சிப்பதற்கோ கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்றும், வழிபாட்டுத்தலங்களில் நிகழ்வுகள் நடைபெற  சிக்கல் இல்லை  என்றபோதிலும், படைவீரர்களின் கண்காணிப்புகளால் அவற்றின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன என்றும் அவர் மொழிந்ததாக அச்செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது.

லொய்காவைப் போன்ற மோதல் இடம்பெறும் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்கள், பொருள்சேதங்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் நிலையைப் பார்க்க முடிகிறது எனவும், பெரும்பாலான பங்குக் கோவில்கள் பங்குமக்களின் இடம்பெயர்தல் காரணமாக மூடப்பட்டுள்ளதுடன், அங்குள்ள 39 பங்குத் தளங்களில் 9 மட்டுமே தற்போது செயல்படுகின்றன என அவர் கவலை தெரிவித்ததாகவும் கூறுகின்றது அச்செய்திக் குறிப்பு.

அருள்பணியாளர் Ne Ne, உட்பட இன்னும் பல அருள்பணியாளர்கள் முகாம்களில் புலம்பெயர்ந்தோர் மத்தியில் வாழ்வதன் மூலம் அவர்களுக்கு ஆன்மிக ஆதரவையும் நம்பிக்கையையும் வழங்குகின்றனர் மற்றும் அவர்களின் போராட்டங்களில் பங்கு கொள்கின்றனர் எனவும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.

இந்தக் கடுமையான நிலைகளுக்கு மத்தியில், மியான்மாரின் கத்தோலிக்கத் தலைவர்கள் நிலையான அமைதியும் நீதியும் நிலவிட வேண்டுமென இறைவேண்டல் செய்கின்றனர் என்றும், சிறந்ததொரு எதிர்காலம் அமைந்து தாங்கள் மீண்டும் தங்களின் புனித இடங்களுக்குத் திரும்புவோம் என மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் என்றும், அருள்பணியாளர் Ne Ne கூறியதாகவும் குறிப்பிடுகிறது அச்செய்தித் தொகுப்பு. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 December 2024, 15:48