தேடுதல்

முதியோரை சந்தித்த திருத்தந்தை முதியோரை சந்தித்த திருத்தந்தை  (AFP or licensors)

நான்காவது தாத்தா பாட்டிகள் தினத்திற்கு திருத்தந்தையின் செய்தி

ஒரு மனிதனின் மீறமுடியாத மாண்புக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்காததினால்தான் நம் சமூகத்தில் முதுமையை சுமையாக நோக்கும் போக்கு அதிகரித்து வருகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும், என்ற திருப்பாடல் 71ன் வார்த்தைகளைத் தலைப்பாகக் கொண்டு இவ்வாண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி திருஅவையில் சிறப்பிக்கப்படும் தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் நாளுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை மாதம் திருஅவையில் சிறப்பிக்கப்பட உள்ள இந்த நான்காவது உலக தினத்திற்கு திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியில், நம் வயது அதிகரித்து, நம் பலம் குறைந்து, நம்  கேசம் வெண்மையாகி, சமூகத்தில் நம் பங்கு குறைந்து, நாம் குறைவாகவே பங்களித்து நாம் தேவையற்றவர்கள் என தோன்றினாலும், கடவுள் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை என கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளின் விசுவாசமிக்க அன்பை எடுத்துரைக்கும் விவிலியம் நமக்கு இறைவனின் இரக்கத்தைக் காண்பித்து நமக்கு ஆறுதலை தருவதாக உள்ளது என அச்செய்தியில் கூறும் திருத்தந்தை, கடவுளின் அருகாமையின் உறுதியையும், கைவிடப்படுவோமோ என்ற முதியோரின் அச்சத்தையும் நாம் புனித நூலில் காண்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள் வேறு இடங்களுக்கு குடிபெயர வேண்டிய சூழல்களிலும், மோதல் காலங்களின்போதும், முதியோர் தனிமையில் விடப்படுவது இடம்பெறுகிறது என்ற திருத்தந்தை, மரணமும் அழிவும் ஆட்சி செய்யும் பல இடங்களில் முதியோர் மட்டுமே வாழ்வின் அடையாளங்களாக இருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.             

சில இடங்களில் முதியோர் பில்லி சூன்யம் வழியாக இளையோரின் சக்திகளைப் பெறுகிறார்கள் என அவர்களுக்கும் இளையோருக்கும் இடையே ஒரு தப்பெண்ணம் நிலவி வருவதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, இத்தகைய முன்சார்பு எண்ணங்கள் முற்றிலுமாக ஒழித்தழிக்கப்படவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

முதியோர் இளையோரின் வருங்காலத்தை திருடுகிறார்கள் என்ற இதையொத்த தவறானக் குற்றச்சாட்டையும் எடுத்துரைத்த திருத்தந்தை, முதியோரை பராமரிப்பதற்கான செலவுகள் சமூகத்தில் அதிகரித்து வருகின்றன என்ற குற்றச்சாட்டு அகற்றப்பட்டு, அனைத்து வயதினரும் ஒன்றிணைந்து சமூகப் பங்களிக்க முயல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.             

ஒரு மனிதனின் மீறமுடியாத மாண்புக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்காததினால்தான் நம் சமூகத்தில் முதுமையை சுமையாக நோக்கும் போக்கு அதிகரித்து வருகிறது என்பதையும் தன் செய்தியில் சுட்டிக்காட்டும் திருத்தந்தை,           இன்றைய காலக்கட்டத்தில் நாம் என்பது மறைந்து நான் என்பது ஆதிக்கம் பெற்றுவருவதும் முதியோர் ஒதுக்கப்படுவதற்கு ஒரு காரணம் என்பதை எழுதியுள்ளார்.     

உடன்பிறந்த உணர்வுநிலையை மனிதகுலம் மறந்து வருவதால் தனிமையும், கைவிடப்படலும் சாதாரண நிகழ்வுகளாக நோக்கப்படுகின்றன என்ற வருத்தத்தையும் தன் செய்தியில் வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விவிலியத்தில் நவோமி, இறந்துபோன தன் மகன்களின் மனைவிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்பும்படி பணித்ததையும், மருமகள் ரூத் தன் மாமியாருக்கு கடைசிவரை பணிவிடைச் செய்ததையும் எடுத்தியம்பி நாமும் ரூத்தின் பாதையில் நடைபோடுவோம் எனக் கேட்டுக்கொண்டார்.

                                    இந்த நான்காவது உலக தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் தினத்தில் நம் தாத்தா பாட்டிகளையும் முதியோரையும் அன்பு கூர்வோம், அவர்களோடு நேரத்தைச் செலவிடுவோம் எனவும் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 May 2024, 15:04