தேடுதல்

காசாவில் குண்டுமழை பொழியும் இஸ்ரயேல் காசாவில் குண்டுமழை பொழியும் இஸ்ரயேல்   (ANSA)

வன்முறையும் மரணமும் அன்பு மற்றும் சுயவரத்தால் தோற்கடிக்கப்படுகின்றன

தெருவில் பிச்சை கேட்கும் புலம்பெயர்ந்தோருக்கு உதவுவதன் வழியாகவும், பேசுவதற்கு ஆளில்லாமல் தனியாக இருக்கும் முதியவரைச் சந்தித்து நமது உடனிருப்பை பெருக்குவதன் வழியாகவும், நாம் அமைதியைக் கட்டியெழுப்ப முடியும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அமைதி என்பது வலிமைவாய்ந்தவர்களால் அல்ல, நமது கரங்களால் ஏற்படுத்தப்படுகிறது என்றும், நமது இல்லங்களில், குடும்பத்தில், அண்டை வீட்டார்களிடத்தில், நமது பணியிடங்களில், நாம் வாழும் சுற்றுப்புறங்களில் நாமும் அமைதியைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் புதிய நூல் ஒன்றிற்கு எழுதியுள்ள அணிந்துரையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

"நீதியும் அமைதியும் தழுவும்" என்ற புத்தகத்திற்கு எழுதிய அணிந்துரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவரும் நமது அன்றாட வாழ்வில் அமைதியின் கைவினைஞர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம் என்பதை அதில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

சுயநலம் மோதலைத் தோற்றுவிக்கும்

அமைதி ஒரு நியாயமான சமுதாயத்திற்கு ஒரு முன்நிபந்தனையாக மாறுவது போல, ஒவ்வொரு மோதலிலும் பாதிக்கப்பட்டவர்களில் முதலில், அமைதி நீதியை சாத்தியமாக்குகிறது என்று எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, இருப்பினும், மனிதகுலத்தின் இந்த இரண்டு பரிமாணங்களுக்கும் செலுத்த வேண்டிய ஒரு விலை உள்ளது என்றும், அதுதான், ஒருவரின் சொந்த சுயநலத்துடன் போராடுதல்", அதாவது, "என்னுடையது" என்பதை 'நம்முடையது' என்று முன் வைப்பது என்றும் விளக்கியுள்ளார்.

அனைத்து சுயநலமும் நியாயமற்றது என்றும், அது நமது தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையில் ஒரு அமைப்பாக மாறும்போது, ​​நமது சொந்த நலன்களைப் பாதுகாக்கும்பொருட்டு அது மோதலுக்கான கதவுகளைத் திறக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் இந்தச் சுயநலம் நமது அண்டை வீட்டாரையும் கூட எதிரியாக்கி  அவர்களை அவமானப்படுத்தப்படுவதற்கும், வீழ்த்தப்படுவதற்கும், தோற்கடிக்கப்படுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் கூட நாம் எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்றும் சுட்டிக்காட்டியுளளார் திருத்தந்தை.

மற்றவர்களுக்காக நம்மை இழப்பது

ஒருவரின் உயிரை மற்றவர்களுக்காக இழப்பதில்தான் கிறிஸ்தவ தியாகத்தின் ஆழமான அர்த்தத்தை நாம் காண்கிறோம் என்று உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இதுதான் உயிர்ப்பின் மறைபொருள் என்றும், வன்முறையும் மரணமும் அன்பு மற்றும்  சுயவரத்தால் தோற்கடிக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நம்முடைய விசுவாசத்தை வெளிப்படுத்த இரத்தம் சிந்தும்படி நாம் கட்டாயப்படுத்தப்பட மாட்டோம், இன்றும் உலகின் பல பகுதிகளிலும் நமது கிறிஸ்தவ சகோதரர்கள் பலருக்கு இது நடக்கிறது, ஆனால் சிறிய விடயங்களில் தான் நாம் கிறிஸ்துவின் சிலுவையின் வலிமையின் அமைதிக்கு சாட்சியாக இருக்க அழைக்கப்படுகிறோம் என்றும் கூறிய திருத்தந்தை, நம்மை புண்படுத்தியவர்களை மன்னித்தல், அநியாயமான அவதூறுகளை சகித்துக் கொள்ளுதல், ஓரங்கட்டப்பட்ட நபருக்கு உதவுதல் ஆகிய புதிய வாழ்வுக்குரிய நம்பிக்கைகள் இதிலிருந்துதான் பிறக்கின்றன என்றும் உரைத்துள்ளார்.

புதிய உலகம் படைக்க நீதி மற்றும் அமைதியின் தேர்வு

சிறிய வார்த்தைகள் மற்றும் பழக்கவழக்கங்களால் அமைதி கட்டமைக்கப்படுகிறது என்று கூறியுள்ள திருத்தந்தை, தெருவில் பிச்சை கேட்கும் புலம்பெயர்ந்தோருக்கு உதவுவதன் வழியாகவும், பேசுவதற்கு ஆளில்லாமல் தனியாக இருக்கும் முதியவரைச் சந்தித்து  நமது உடனிருப்பை பெருக்குவதன் வழியாகவும், நாம் அமைதியைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் விளக்கியுள்ளார்.

அன்றாட மற்றும் எளிதில் அடையக்கூடிய இந்த அமைதி மற்றும் நீதியின் தேர்வுகளில், ஒரு புதிய உலகின் தொடக்கத்தை நாம் விதைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள திருத்தந்தை, அப்படிப்பட்ட நிலையில், இறப்பு என்பது இறுதி வார்த்தையாக இருக்காது மற்றும், அனைவருக்கும் வாழ்க்கை வளமானதாக அமையும் என்று கூறி தனது அணிந்துரையை நிறைவு செய்துள்ளார்.

"நீதியும் அமைதியும் தழுவும்" (Justice and peace will embrace) என்னும் இந்நூல் வத்திக்கான் (LEV) மற்றும் L'Arena பதிப்பகங்களால் மே 15, இப்புதனன்று வெளியிடப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 May 2024, 14:56