உலகளாவிய அளவில் ஆயுத வர்த்தகம் 4.2 விழுக்காடு அதிகரிப்பு!
செல்வாஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உலகளாவிய ஆயுத வர்த்தகத்தின் வருவாய் 2023-ஆம் ஆண்டில் 63, 200 கோடியாக உயர்ந்துள்ளது என்றும், இது 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 4.2 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளது SIPRI என்றழைக்கப்படும், Stockholm உலக அமைதி ஆய்வு மையம்.
உக்ரைன் மற்றும் காசாவில் இடம்பெற்று வரும் போர்கள், கிழக்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் பிற இடங்களில் மறுஆயுதமாக்கல் திட்டங்கள் போன்ற தற்போதைய மோதல்களின் தாக்கத்தை எடுத்துக்காட்டும் இந்த அறிக்கை, மோதல்கள் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் நீடிப்பதால், இந்தப் போக்கு 2024-ஆம் ஆண்டிலும் தொடரக்கூடும் என்று சுவீடன் நாட்டைத் தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றின் நிபுணர்கள் கூறியுள்ளதாகவும் உரைக்கிறது.
அமெரிக்கா
2023-ஆம் ஆண்டில் அமெரிக்கா ஆயுதத் துறையில் தனது மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டது என்றும், உலகளாவிய ஆயுத வர்த்தகத்தின் வருவாயில் 50 விழுக்காடு-முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2.5 விழுக்காடு அதிகம் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
சீனா
உலகின் இரண்டாவது பெரிய ஆயுத உற்பத்தியாளரான சீனா, 0.7 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது என்றும், ஆனால் அவற்றின் விற்பனை 10,300 கோடியாக உள்ளது என்றும் தெரிவிக்கும் இவ்வறிக்கை, தென் சீனக் கடல், தைவான் மற்றும் இந்தியாவுடனான அதன் எல்லையில் அதன் விருப்பத்தை ஏற்றுக்கொள்ளும் முக்கியமான மேம்பட்ட அமைப்புகளுடன் நாட்டின் இராணுவத்தை நவீனமயமாக்குவதில் சீன நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன என்றும் குறிப்பிடுகிறது.
நேட்டோ நாடுகள்
புவிசார் அரசியல் பதட்டங்கள் உலகளவில் ஆயுத வருவாயை எவ்வாறு இயக்குகின்றன என்பதை எடுத்துக்காட்டும் இவ்வறிக்கை, ஐரோப்பாவில், நேட்டோ நாடுகள் உக்ரைன் மீதான இரஷ்யாவின் ஆக்கிரமிற்குப் பதிலளிக்கும் வகையில் இராணுவச் செலவினங்களை அதிகரித்தன என்றும், இதன் விளைவாக பல்வேறு நாடுகளில் ஆயுத நிறுவனங்கள் விற்பனையில் ஏற்றம் கண்டன என்றும் குறிப்பிடுகிறது.
அமைதிக்கான திருத்தந்தையின் வேண்டுகோள்
அமைதிக்காக அயராது வேண்டுகோள் விடுத்து வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயுத வர்த்தகம் மற்றும் அது ஏற்படுத்தும் மரணங்கள் குறித்தும், ஆயுதங்கள் தயாரிக்கும் பணத்தை வறுமையை நேரடியாக நிவர்த்தி செய்வதற்கும், வளர்ச்சி, நலவாழ்வ, மற்றும் கல்விக்காக மறு ஒதுக்கீடு செய்தால் உலகப் பசியை ஒழிக்க முடியும் என்று அடிக்கடி கூறி வருவதும் இங்கே நினைவுகூரத் தக்கது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்