இயேசுவின் இரண்டாம் வருகை இயேசுவின் இரண்டாம் வருகை  

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு : விழிப்புடன் காத்திருப்போம்!

நம்பிக்கையோடும், விழிப்புணர்வோடும் நமது வாழ்வின் பக்கங்களைத் திருப்பிப் பார்ப்போம். ஆண்டவரை நோக்கி நம் மனங்களைத் திறப்போம். அப்போது அருளின் காலமான இத்திருவருகைக் காலத்தில் இறைவனின் அருள் நம் உள்ளங்களை நிறைக்கும்.
திருவருகைக் காலம் முதல் ஞாயிறு : விழிப்புடன் காத்திருப்போம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்   I. எரே 33:14-16       II. 1தெச 3:12-4:2     III.  லூக் 21:25-28,34-36)

பொதுக்காலத்தை நிறைவுக்குக் கொணர்ந்து இன்று நாம் திருவருகைக் காலத்தைத் தொடங்குகிறோம். நமது மறையுரைச் சிந்தனைகளைத் தொடங்குவதற்கு முன்பாக இக்காலத்தின் பின்புலம் குறித்து சற்று அறிந்துகொள்வோம். திருவருகைக் காலம் ஆங்கிலத்தில் 'Advent' என்று அழைக்கப்படுகிறது. இலத்தீன் மொழியில் adventus அதாவது, ‘வருகை’ என்று அழைக்கப்படுகின்ற இக்காலம் பழைய கிறித்தவ வழக்கில் 'ஆகமன காலம்' என்ற சொல்லாடலால் அழைக்கப்பட்டது. திருவருகைக் காலம் திருஅவையின் வழிபாட்டு ஆண்டின் தொடக்கமும் ஆகும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவை எதிர்நோக்கிக் காத்திருந்து, அதற்காக நம்மையே முழுமையாகத் தயாரிக்கும் காலமாக இத்திருவருகைக் காலம் அமைந்துள்ளது. கீழைத் திருஅவைகளில் (Eastern churches) இக்காலம் "கிறிஸ்து பிறப்பு விழா நோன்பு" (Nativity Fast) என்னும் பெயர்கொண்டுள்ளது என்பதையும் நம் நினைவில் கொள்வோம். கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவுக்கு முந்திய ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்து அரசர் பெருவிழாவாகக் கொண்டாடி வருகின்றோம். இப்பெருவிழாவைத் தொடர்ந்து வரும் ஞாயிறன்று திருவருகைக் காலம் தொடங்குகிறது. இதுவே கிறித்தவ திருவழிபாட்டு ஆண்டின் முதல் காலம். திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறுதான், புதிய திருவழிபாட்டு ஆண்டின் முதல் நாள்  என்பதையும் நம் உள்ளங்களில் இருத்துவோம். இன்னும் சொல்லப்போனால் இன்று நமக்குப் புத்தாண்டு என்றுகூட சொல்லலாம். இக்காலத்தைக் குறிக்கும் கிரேக்கச் சொல் parousia ஆகும். இது 'வருகை' என்னும் பொருள் பெற்றிருந்தது. ஆயினும், பொதுவாக parousia என்னும் சொல் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு, கிறித்தவர்களுக்குத் திருவருகைக் காலம் என்பது, வரலாற்றில் மனிதராகப் பிறந்த கடவுளின் ஒரே திருமகனாகிய இயேசுவின் முதல் வருகையை சிறப்பிக்கவும், உலக முடிவில் அவர் மாட்சியுடன் மீண்டும் வரவிருக்கின்ற இரண்டாம் வருகையை எதிர்நோக்கவும் தயாரிப்பு செய்கின்ற காலமாக அமைந்துள்ளது. இதன் அடிப்படையில்தான் இன்றைய  நற்செய்தி வாசகமும் அமைந்துள்ளது. ஆக, ஆண்டவரின் திருவருகைக்காகக் காத்திருக்க வேண்டும் என்பதைத்தான் இக்காலம் நமக்கு வலிறுயுத்துகின்றது. புனித பவுலடியாரும் 'ஆண்டவரிடம் அன்பு செலுத்தாத எவரும் சபிக்கப்படுக! மாரனாத்தா!' (காண்க 1 கொரி 16:22) என்கின்றார். அதாவது, 'ஆண்டவரே வாரும்' என்று பொருள்படும் 'மாரனாத்தா' என்ற அரமேய சொல்லைப் பயன்படுத்துகிறார்.

ஊதா நிறம் திருவருகைக் காலத்திற்கு உரிய நிறம். மிகவும் சிறப்பாக இந்தத்  திருவருகைக் காலத்தின் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் நான்கு வண்ணத்தில் மெழுகுவர்த்திகளை ஏற்றுகிறோம். இவற்றில் முதல் வாரத்தின் மெழுகுவர்த்தி ஆபிரகாம் உள்ளிட்ட இஸ்ரயேலின் குலமுதுவர்களையும், இரண்டாம் வாரத்தின் மெழுகுவர்த்தி இயேசுவின் பிறப்பை முன்னறிவித்த எசாயா உள்ளிட்ட இறைவாக்கினர்களையும், மூன்றாம் வாரத்தின் மெழுகுவர்த்தி, இயேசுவைச் சுட்டிக்காட்டி அவரது வழிகளை ஆயத்தப்படுத்திய திருமுழுக்கு யோவானையும், நான்காம் வாரத்தின் மெழுகுவர்த்தி, இயேசுவின் தாய் மரியா, வளர்ப்புத் தந்தை புனித யோசேப்பு ஆகியோரையும் நினைவுபடுத்துகிறது. கிபி 4-ஆம் நூற்றாண்டிலிருந்து திருவருகைக் காலம் நோன்புக் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது நோன்பு கடைப்பிடித்தல் தவக் கால முயற்சியாக மட்டும் கருதப்படுகிறது. அதனால்தான் திருவருவகைக் காலத்தின்போது தவக்காலம்போன்று திருமணம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்படுவது தவிர்க்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது பல்வேறு இடங்களில் இது நடைபெறுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. திருவருகைக் காலம் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் விழிப்பையும் குறிக்கின்ற காலமாகப் பொருள் விளக்கம் பெறுகிறது. திருவருகைக் காலத்தின் இறுதி எட்டு நாள்கள் (டிசம்பர் 17-24) தனிச்சிறப்பு வாய்ந்தவை. இக்காலத்தில் திருஅவை இயேசுவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதைக் காட்டும் விதத்தில் இறைவேண்டுதல்கள் எழுப்பப்படுகின்றன.

இந்தப் பின்னணியில் இப்போது நமது மறையுரைச் சிந்தனைக்குள் செல்வோம். இன்றைய முதல் வாசகம் அடிமைத்தளையில் உழன்றுபோயிருந்த இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கை தரும் செய்தியாக அமைந்துள்ளது. நமது வாழ்வை பெரும் வேதனைக்குள் தள்ளியிருக்கின்ற இந்த அடிமைத்தளையிலிருந்து நமக்கொரு விடுதலை கிடைக்காதா என்று ஏங்கித் தவித்த இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் எரேமியா வழியாக ஆண்டவர் விடுதலையும் மகிழ்ச்சியும் தரும் நம்பிக்கை செய்தியை  வழங்குகின்றார். இப்போது அப்பகுதியை வாசிப்போம். "இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது இஸ்ரயேல் வீட்டாருக்கும் யூதா வீட்டாருக்கும் நான் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவேன். அந்நாள்களில் — அக்காலத்தில் — நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். அந்நாள்களில் யூதா விடுதலை பெறும்; எருசலேம் பாதுகாப்புடன் வாழும். “யாவே சித்கேனூ” என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்." இங்கே இஸ்ரயேல் வீட்டாருக்கும் யூதா வீட்டாருக்கும் தான்  கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவதாகவே கடவுள் உரைக்கின்றார்.

இதன் பின்புலத்தை சற்று அறிந்துகொள்வோம். சாலமோன் அரசரின் ஆட்சிக்கு முன்னும் பின்னும், 'இஸ்ரயேல்' என்ற என்ற சொல் கானான் தேசத்திலுள்ள யூத மக்கள் அனைவரையும் குறித்தது. அன்றைய நாடு 'இஸ்ரயேல்' என்றே  அழைக்கப்பட்டது. ஆனால் சாலமோன் அரசர் அந்நியப் பெண்களை மணந்துகொண்டு, அவர்களின் தெய்வங்களை வழிபட்டு கடவுளுக்குத் துரோகமிழைத்தார். இதன் விளைவாக, கடவுள் அவரது அரசை வடக்கு தெற்கு என இரண்டு அரசாகப் பிரித்தார். இதுவே இஸ்ரயேல், யூதா என ஆனது. நெபாற்று என்பவனின் மகனும் சாலமோனின் பணியாளருள் ஒருவனுமான எரொபவாம் வடக்கு குலமான இஸ்ரயேல் நாட்டிற்கும். சாலமோனின் மகன் ரெகபெயாம் தெற்கு குலமான யூதா நாட்டிற்கும் மன்னர்களாக மக்களை ஆண்டு வந்தனர். ஆனால் இஸ்ரயேல் குல அரசோ அல்லது யூதா குல அரசோ சாலமோன் அரசரைக் கடவுள் தண்டித்ததிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. மாறாக அவர்கள் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்து பொல்லாதவர்களாகவும், பாவிகளாகவும் மாறினார்கள். வேற்றின தெய்வங்களை வழிபடத் தொடங்கினர். இதன் விளைவாக, கடவுள் அசீரியப் பேரரசை இஸ்ரயேல் மீது படையெடுக்கச் செய்து அவர்களை அந்நாட்டிற்கு அடிமைகளாக நாடு கடத்தினார் (காண்க. 2 அர 17:5-7). அவ்வாறே யூதா வீட்டார் கடவுளுக்கு எதிராகத் தொடர்ந்து பாவம் செய்து மனந்திரும்பாமல் இருந்ததால், பின்னாளில் அவர்களின் தெற்கு அரசை கடவுள் அகற்றினார். அவர்கள் பாபிலோனிய இராணுவத்தால் பாபிலோனுக்கு அடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்டனர் (காண்க. 2 அரச 24:10-14). ஆக, இஸ்ரயேல் நாட்டினர் அசீரியாவிற்கும், யூதா நாட்டினர் பாபிலோனுக்கும் அடிமைகளாக நாடுகடத்தப்பட்டனர். இந்தப் பின்னணியில்தான் அவர்களை சொந்த நாட்டிற்குத் திரும்ப கொணர்வேன் என்ற தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதாகக் கூறுகின்றார் ஆண்டவராம் கடவுள்.

அடுத்து "நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார்" என்ற இறைத்தந்தையின் வார்த்தை அவரது ஒரே திருமகனாகிய இயேசுவை மட்டுமே குறிக்கின்றது. மேலும்  'ஆண்டவரே நமது நீதி’ என்று பொருள்படும் “யாவே சித்கேனூ” என்ற வார்த்தையையும் கடவுள் பயன்படுத்துகிறார். இதுமட்டுமன்றி, இதே கருத்தை மையப்படுத்திய இறைவார்த்தைகள் இதே புத்தகத்தின் 23-ஆம் அதிகாரம் 6-ஆம் வசனத்திலும் வருகிறது. அதாவது, "இதோ நாள்கள் வருகின்றன; அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள ‘தளிர்’ தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார்" (வச 5)  என்ற கடவுளின் வார்த்தைகளில், நீதியும், நேர்மையும், உண்மையும், விடுதலையும் கொண்ட இயேசுவின் அரசே (கடவுளின் அரசு) என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்பது மிகவும் தெளிவாக வெளிப்படுகிறது.

இயேசுவின் காலத்தில் யூதர்கள் உரோமையருக்கு அடிமைப்பட்டிருந்தனர். இயேசு கடவுள் காட்டிய மெசியாவாக இருப்பாரோ என்று எண்ணிக்கொண்டிருந்த வேளை, மக்களுடனான அவரது அணுகுமுறைகள் அவர்களின் கனவினை நொறுக்கிப்போட்டன. அதாவது, இறைமகன் எனப்படும் மெசியா என்னும் அரசர் துன்புறும் மக்களுடன் இணைந்துத் துன்புற்று அவர்களுக்கு விடுதலை அளித்து அவர் அனைத்துலகிற்கும் அனைவருக்குமான அரசராக இருப்பார் என்பதையும், அவர்மீது நம்பிக்கைக்கொள்ளும் அனைவருக்கும் அவரது ஆட்சியில் இடமுண்டு என்பதையும் அவர் தனது அர்ப்பணம் நிறைந்த பணிகள் வழியாக எடுத்துக்காட்டினார். ஆக, இவர் துன்புறும் அரசர் (suffering Messiah) மட்டுமல்ல, மாறாக தனது கொடிய மரணத்திற்குப் பிறகு, வெற்றிவாகைசூடி நிலைவாழ்வு அருளும் அரசாக இருப்பார் (the king of eternal life) என்பதும் அவரது செயல்களில் திண்ணமாய்  வெளிப்பட்டது. இதன் காரணமாகவே, இறுதி நாள்களில் "மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில், உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது” என்று நம்பிக்கை தருகின்றார் இயேசு.

ஆக, சோதனைக் காலங்களில் நாம் உறுதியான மனம்கொண்டவர்களாக விழிப்புடன் இருப்போமேயானால், நாம் என்றுமுள்ள இறையாட்சியை உரிமையாக்கிக்கொள்ள முடியும். எனவேதான், “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” என்று நமக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு.

இங்கே, இயேசு கூறும் ‘விழிப்புணர்வு’ என்ற வார்த்தை, நமக்கான கடமைகளையும் பொறுப்புகளையும் எடுத்துரைக்கிறது என்பதையும் புரிந்துகொள்வோம். அதாவது, குடிவெறி, களியாட்டம் போன்ற இவ்வுலகக் காரியங்களுக்கு அடிமைபட்டு போய்விடாமல், நாம் துன்புறும் நிலையிலும் கூட விண்ணுலகத்திற்குரிய செயல்களை மட்டுமே செய்யவேண்டுமென இயேசு நமக்கு அறிவுறுத்துகின்றார். அந்நிலையில் ஆண்டவர் நம்மைச் சந்திக்கும்போது நாம் அவரால் மெச்சத்தக்கவர்களாகவும் பேறுபெற்றவர்களாகவும் இருப்போம் என்பது திண்ணம். இதனைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில், "நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக! சகோதர சகோதரிகளே! நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக் கொண்டீர்கள்; அப்படியே வாழ்ந்தும் வருகிறீர்கள். இதில் இன்னும் முன்னேற வேண்டுமென ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறும் புனித பவுலடியார், "ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நீங்கள் அறிவீர்கள்' என்று கூறி ஆண்டவரது கட்டளைகளைக் கடைபிடித்து வாழவும் நம்மை அறிவுறுத்துகிறார்.

நமது ஆன்மிக வாழ்வைக் குறித்து விழிப்பாய் இருக்க வேண்டும் என்று கருதும் அதேவேளையில் நம்மைச் சுற்றி  என்ன நிகழ்கின்றது என்பதிலும் நாம் மிகவும் விழிப்பாய் இருக்க வேண்டும். குறிப்பாக நம்மைச் சுற்றி நிகழ்ந்து வரும் போர்கள், மோதல்கள், கலவரங்கள், இதனால் ஏற்படும் இடம்பெயர்தல், புலம்பெயர்தல், பஞ்சம், பட்டினி, வறுமை, பருவநிலை மாற்றம், இவற்றால் பாதிக்கப்படும் மக்கள், குத்திக் கிழிக்கப்படும் நாம் வாழும் இல்லமாகிய இந்தப் பூமி ஆகிய அனைத்தையும் குறித்து நாம் விழிப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் தொடக்கத்தில் பார்த்ததுபோல, இத்திருவருகை காலத்தில் நாம் ஒருவர் ஒருவருக்காகவும், அனைத்துலக மக்களுக்காகவும் இறைவேண்டல் செய்ய வேண்டும். ஆகவே, நமது விழிப்புணர்வு என்பது நம்மையும் நமது குடும்பங்களையும் கடந்து சென்று எல்லைதாண்டி பயணிக்கட்டும்.

புதிதாக உண்பதிலும், உடுத்துவதிலும், வீடு கட்டுவதிலும், வாகனங்களை வாங்குவதிலும், கைபேசிகளைப் பயன்படுத்துவதிலும், சொத்துபத்துகள் வாங்கிச் சேர்ப்பதிலும் நாம் காட்டும் விழிப்புணர்வை இயேசு ஆண்டவரின் பிறப்பிற்காக நம்மைத் தயார்படுத்துவதிலும் காட்டுவோம். ஆகவே, நம்பிக்கையோடும், விழிப்புணர்வோடும் நமது வாழ்வின் பக்கங்களைத் திருப்பிப் பார்ப்போம். ஆண்டவரை நோக்கி நம் மனங்களைத் திறப்போம். அப்போது அருளின் காலமான இத்திருவருகைக் காலத்தில் இறைவன் வழங்கும் அருள் நம் உள்ளங்களை நிறைக்கும். இவ்வருளுக்காக இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 November 2024, 12:56