புதன் மறைக்கல்வி உரை - தூய ஆவியின் கனிகள் - மகிழ்ச்சி

நவம்பர் 27 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தூய ஆவியின் கனிகள் என்ற தலைப்பில் மகிழ்ச்சி என்பது குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

நவம்பர் 27 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தூய ஆவியின் கனிகள் என்ற தலைப்பில் மகிழ்ச்சி என்பது குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் மாதத்தின் இறுதி புதன்கிழமையும் பொதுக்காலத்தின் இறுது வாரமுமாகிய இன்று நவம்பர் 27 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு செவிசாய்க்க ஆர்வமுடன் காத்திருந்தனர். அவர்கள் நடுவில் திறந்த காரில் வலம்வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களை வாழ்த்தியபடி புதன் மறைக்கல்வி உரை வழங்கும் இடத்தை வந்தடைந்து சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தை துவக்கினார்.

அதன்பின் திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமடலில் உள்ள அறிவுரை என்னும் தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன.

பிலிப்பியர் 4: 4-7

ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள். கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால், நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தூய ஆவியாரும் மணமகளும். நம் நம்பிக்கையாம் இயேசுவை நோக்கி இறைமக்களை வழிநடத்தும் தூய ஆவியார்’ என்ற தலைப்பின் 15ஆம் பகுதியாக தூய ஆவியின் கனிகள் மகிழ்ச்சி என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

தனிவரங்கள் மற்றும் பொதுநலனுக்கான தூயஆவியாரின் கொடைகள் பற்றி கடந்த வாரத்தில் அறிந்துகொண்ட நாம் இன்று அதன் தொடர்ச்சியாக தூய ஆவியின் கனிகள் என்பது குறித்துக் காண இருக்கின்றோம். புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும் என்று குறிப்பிடுகின்றார். ஆக மேற்கூறிய ஒன்பதும் தூய ஆவியின் கனிகளாகும்.

திருஅவையின் நன்மைக்காக தூயஆவியார் தாம் விரும்புகின்றவருக்கு அவர் விரும்புகின்றபோதெல்லாம் தனிவரங்களைப் போலல்லாமல் அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் போன்றவற்றை தூய ஆவியின் கனிகளாக கொடுக்கின்றார். இது நமது அருளுக்கும் சுதந்திரத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பின் பலன்களாக கிடைக்கின்றன. இக்கனிகள் ஒருவரின் படைப்பாற்றலை வெளிப்படுத்துகின்றன. எல்ல்லோரிடமும் அன்பின் வழியாய் செயலாற்றும் நம்பிக்கையிலும், சில நேரங்களில் ஆச்சர்யமூட்டுகின்ற மற்றும் மகிழ்ச்சியான வழிகளிலும் வெளிப்படுகின்றன. நாம் அனைவரும் திருஅவையில் திருத்தூதர்களாகவோ இறைவாக்கினர்களாகவோ, நற்செய்தியாளார்களாகவோ இருக்க முடியாது. ஆனால் நாம் அனைவரும் பொறுமையாக அடக்கமாக அமைதியை ஏற்படுத்துபவர்களாக பிறரன்புப் பணிகள் செய்பவர்களாக இருக்க வேண்டும்.

திருத்தூதர் பவுலால் பட்டியலிடப்பட்ட தூய ஆவியின் கனிகளில் மகிழ்ச்சி என்ற ஒன்றை முன்னிலைப்படுத்த விரும்புகின்றேன். இயேசுவை சந்திப்பவர்களின் இதயத்தையும் முழு வாழ்க்கையையும் நற்செய்தியின் மகிழ்ச்சி நிரப்புகிறது. அவரால் மீட்கப்பட தங்களை அனுமதிப்பவர்கள் பாவம், சோகம், வெறுமை மற்றும் தனிமையிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் துன்பமான நிகழ்வுகள் நடந்தாலும் அமைதி எப்போதும்  அவர்களில் இருக்கும். இயேசுவோடு அவரது மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

தூய ஆவியின் கனியான மகிழ்ச்சி என்பது ஒவ்வொரு மனித மகிழ்ச்சியுடனும் பொதுவான முழுமை மற்றும் மனநிறைவின் ஒரு குறிப்பிட்ட உணர்வைக் கொண்டுள்ளது. அது என்றென்றும் நிலைத்திருக்க விரும்புகிறது. நமது மகிழ்ச்சி நம்மை விட்டு விரைவில் கடந்து போகின்றது. இளமை, உடல்நலன், ஆற்றல், அழகு, நட்பு, அன்பு என எல்லாமே நம்மை விட்டு விரைவாகக் கடந்து போகிறது. 100 ஆண்டுகள் வரை நீடித்திருக்கும் அதன் பின் அத்தனையும் மறைந்து விடும். அப்படி மறைந்து போகாதவைகள் நிறைவு தராதவைகளாக சலிப்பூட்டக்கூடியவைகளாக மாறுகின்றன.  புனித அகுஸ்தீன் கடவுளிடம் கூறியது போல், " ஆண்டவரே, உமக்காக எங்கள் இதயத்தை உருவாக்கினீர். அது மீண்டும் உம்மில் இளைப்பாறும் வரை அமைதியற்றதாக இருக்கிறது என்பது போல் இருக்கின்றன நமது இதயங்கள். அழகு, அமைதி, அன்பு, மகிழ்ச்சி ஆகியவற்றைத் தேடுவதில் மனம் அமைதியற்று இருக்கின்றது.

நற்செய்தியின் மகிழ்ச்சி, நற்செய்தியிலிருந்து பெறும் மகிழ்ச்சி, மற்ற எந்த மகிழ்ச்சியையும் போலல்லாமல், ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றது. இயேசுவுடனான அருளின் சந்திப்புக்கள், கடவுளது அன்பினால் மகிழ்வான நட்புக்களாக உருவாகி நமது தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு மற்றும் தன்னைப்பற்றிய கவனம் ஆகியவற்றிலிருந்து நம்மை மீட்கின்றது. இந்த நற்செய்தியின் மகிழ்ச்சியை தனது வாழ்வில் பெற்றுக்கொண்ட ஒருவர் வாழ்வை அர்ப்பணிக்காமலோ, பிறருடன் தொடர்பு கொள்ளமலோ இருக்க முடியாது. நற்செய்தியின் மகிழ்ச்சி காலத்தால் அழியாதது. பிறருடன் பகிர்ந்து கொள்ளப்படும்போது அது இரட்டிப்பான மகிழ்ச்சியினை அளிக்கின்றது. பிறரிடத்திலும் அந்த மகிழ்ச்சி பரவுகின்றது பெருகுகின்றது.

ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு உரோமில் வாழ்ந்த புனிதரான பிலிப்பு நேரி மகிழ்ச்சியின் துறவியாக வாழ்ந்தார். ஏழைச்சிறார்கள், கைவிடப்பட்ட குழந்தைகள் விளையாடவும், இறைவார்த்தையைக் கேட்கவும் தான் உருவாக்கிய ஓரத்தோரியோ என்னுமிடத்தில் அவர்களிடம் கூறியதாவது, பிள்ளைகளே மகிழ்ச்சியாக இருங்கள், மனச்சோர்வு உடையவர்களாகவோ துயரமானவர்களாகவோ இருக்க வேண்டாம். நீங்கள் பாவம் செய்யாமல் இருங்கள் அதுவே போதும். நீங்கள் நல்லவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் என்று கூறுவார்.

புனித பிலிப் நேரிக்கு கடவுள் மீது அளவற்ற அன்பு இருந்தது, சில சமயங்களில் அவரது இதயம் வெடித்துவிடும் அளவுக்கு அன்பால் நிறைந்திருந்தது. அவரது மகிழ்ச்சி நிறைவானதாக தூய ஆவியின் கனியாக இருந்தது. 1575 ஆம் ஆம் ஆண்டு யூபிலியில் பங்கேற்ற புனித பிலிப்பு நேரி ஏழு ஆலயங்களுக்குச் செல்லும் முறையைத் துவக்கினார்.

அவரது காலத்தில் மகிழ்வின் நற்செய்தியாளராக விளங்கினார். இயேசு எப்போதும் நமது பாவங்களை மன்னிக்கின்றார், எல்லாவற்றையும் மன்னிக்கின்றார், நாம் மன்னிக்க முடியாதது என்று நாம் எண்ணும் அனைத்தையும் அவர் மன்னிக்கின்றார் என்பதை ஆழமாக நம்பியவராக புனித பிலிப்பு நேரி திகழ்ந்தார். கடவுள் எப்போதும் மன்னிப்பவர் எல்லாரையும் மன்னிப்பவர் இதுவே மகிழ்ச்சி. எனவே தான் பாவ மன்னிப்பு அருளடையாளம் வழங்கும் அருள்பணியாளர்களிடம் நாம் எல்லாவற்றையும் மன்னியுங்கள் எப்போதும் மன்னியுங்கள் என்று கூறுவேன்.  

நற்செய்தி என்னும் வார்த்தை மகிழ்ச்சியின் செய்தி நல்ல செய்தி என்று பொருள்படுகின்றது. எனவே, சோர்வான முகங்கள் மற்றும் துயரத்தால் இருண்ட முகங்களுடன் அல்ல மாறாக மறைந்திருக்கும் புதையல் மற்றும் விலைமதிப்பற்ற முத்து ஆகியவற்றைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியுடன் நாம் ஒருவர் மற்றவருடன் தொடர்பு கொள்ள வேண்டும். திருத்தூதர் பவுல் கூறியது போல, ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள். கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும் என்ற வரிகளை நினைவில் கொண்டு வாழ  முயல்வோம்.  அனைவருக்கும் நன்றி. இவ்வாறு தனது மறைக்கல்வி உரையினைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவு செய்ததும் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார்.

டிசம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை துவங்க உள்ள திருவருகைக் காலம் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், கிறிஸ்து பிறப்பிற்காக நம்மை நாமே தயரிக்க அழைப்புவிடுக்கும் இந்த திருவருகைக் காலத்தில் விழிப்பு நிறைந்த செபம், மற்றும் உறுதியான எதிர்நோக்குடன் ஆற்றல் நிறைந்த காலத்தை வாழ அழைப்புவிடுத்தார்.

அடுத்த புதன்கிழமை முதல் புதன் மறைக்கல்வி உரைச்சுருக்கமானது பிற ஐரோப்பிய மொழிகளைப்போல சீன மொழியிலும் எடுத்துரைக்கப்பட இருப்பதாகக் கூறிய திருத்தந்தை அவர்கள், துன்புறும் உக்ரைன் மக்களுக்காக செபிக்க கேட்டுக்கொண்டார்.

தற்போது நிலவிவரும் குளிர்காலச்சூழலில் போதுமான வெப்பமின்றி உக்ரைன் சிறார் மற்றும் இளையோர் பாதிக்கப்படுகின்றனர் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், புனித பூமியில் அமைதி நிலவ செபிப்போம், பாலஸ்தீனம் ,இஸ்ரயேள், நாசரேத், போற இடங்களில் அமைதி நிலவ அனைவரும் இணைந்து அமைதிக்காக செபிப்போம் என்றும் கூறினார்.

இவ்வாறு தனது  செப விண்ணப்பங்களை  நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விண்ணகத்தந்தையை நோக்கிய செபத்திற்குப் பின் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2024, 08:52

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >