இறைஉறவு, நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்தும் மதங்கள்

கிறிஸ்தவ நம்பிக்கையையும், மக்களின் கலாச்சார விழுமியங்களையும், இதயங்களையும் ஒன்றிணைத்து, ஒரு சமூகத்தை ஒன்றிணைப்பதில் மக்களின் பக்தி முயற்சிகள் வெற்றி பெறும்போது அதிலிருந்து முழு சமூகம், திருஅவை, மற்றும் அரசியல் அமைப்புகளுக்கு இடையிலான உறவுகளுக்கு பலன் கிடைக்கின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அஜாக்சியோ உள்ளூர் நேரம் காலை 10.30 மணியளவில் அஜாக்சியோவின் Palais des Congrès எனப்படும் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தினை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை அஜாக்சியோ தலத்திருஅவை ஆயர் கர்தினால் François-Xavier Bustillo அவர்கள் வரவேற்றார். அதன்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 47ஆவது திருத்தூதுப் பயணத்தின் முதல் உரையும் மதம் சார்ந்த மாநாட்டின் நிறைவு விழா உரையையும் வழங்கினார் திருத்தந்தையின் உரைச் சுருக்கத்திற்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.  

அன்பான ஆயர்கள், கல்வியாளர்கள் மற்றும் மதங்களின் தலைவர்களை வாழ்த்துகிறேன். பிரான்ஸ் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து பல அறிஞர்கள் மற்றும் ஆயர்கள் கலந்துகொள்ளும் இந்த மத்தியதரைக் கடலில் சிறப்புற்ற மதங்கள் பற்றிய மாநாட்டின் முடிவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மத்தியதரைக் கடல் நீரால் கழுவப்பட்ட நிலங்கள் பல வரலாற்றில் நுழைந்துள்ளன, பல குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்த பல நாகரிகங்களின் தொட்டில்களாகவும் அவை உள்ளன. மூன்று கண்டங்களுக்கு நடுவில் உள்ள இந்த மாபெரும் மத்திய தரைக்கடலின் கலாச்சார, மத மற்றும் வரலாற்றிற்கு சான்றளிக்கும் கிரேக்க-ரோமன் மற்றும் யூத-கிறிஸ்தவர்களை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

கிரேக்கம் மற்றும் இலத்தீன் என்னும் இரண்டு பாரம்பரிய இலக்கியங்களில் இடம்பெறும்  புராணங்கள், கதைகள் மற்றும் புனைவுகளின் பிறப்புக்கு  மத்திய தரைக்கடல் சிறந்த காரணமாக இருந்தது என்பதை நாம் மறந்துவிட முடியாது. தத்துவ சிந்தனைகள், கலைகள்,தொழில்நுட்ப வழிகாட்டுதல்களுடன் சேர்ந்து, நமது கடல் என்ற ஓர் உயர் கலாச்சாரத்தை உருவாக்குதல், தகவல் தொடர்பு வழிகளைத் திறத்தல்,  உள்கட்டமைப்பு மற்றும் நீர்வழிகளை உருவாக்குதல், போன்றவற்றிற்கு உதவியது. மேலும் சட்ட அமைப்புகள் மற்றும் நிறுவனங்களை உருவாக்கவும் மத்திய தரைக்கடல் உதவியது.

மத்திய தரைக்கடல் மற்றும் அண்மைக் கிழக்கிற்கு இடையில், இஸ்ரயேலின் கடவுளுடன் இணைக்கப்பட்ட ஒரு சிறப்பு மத அனுபவம் உருவானது. தன்னை மனிதகுலத்திற்கு வெளிப்படுத்தி, தனது மக்களுடன் இடைவிடாத உரையாடலை மேற்கொண்டு, கடவுளின்  மகனாக இயேசு இறைத்தந்தையின் முகத்தை நமக்கு வெளிப்படுத்தினார்.  இறைத்தந்தையை நமக்கும்  தந்தையாக கொடுத்து கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் இடையேயான உடன்படிக்கையை நிறைவேற்றினார்.

கடவுளின் மகனாக இவ்வுலகில் இயேசு பிறப்பெடுத்து இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தாலும் கிறிஸ்தவ நம்பிக்கை இன்று வரை அதன் கலாச்சார நம்பிக்கைகளைப் பின்பற்றி வருகின்றது. தற்போது ஐரோப்பிய கலாச்சாரத்தில் கடவுளைப் பற்றிய கேள்விகள் குறைந்து வருகின்றன. கடவுளின் உடனிருப்பு மற்றும் வார்த்தையில் அலட்சியமாக மக்கள் இருப்பதை நாம் காண்கின்றோம். இந்த சூழ்நிலையை பகுப்பாய்வு செய்வதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவசரக் கருத்துக்கள் மற்றும் சித்தாந்த தீர்ப்புகளில் ஈடுபடும்போது சில சமயங்களில் அவை கிறிஸ்தவ கலாச்சாரத்தையும் மதச்சார்பற்ற கலாச்சாரத்தையும் ஒருவருக்கொருவர் எதிர்த்து நிற்க வழி செய்கிறது.

கிறிஸ்தவ மற்றும் மதச்ச்சார்பற்ற கலாச்சாரம் ஆகிய  இந்த இரண்டு எல்லைகளுக்கும் இடையில் ஒரு பரஸ்பர வெளிப்படைத்தன்மையை அங்கீகரிப்பது மிக முக்கியம். இதன் வழியாக நம்பிக்கையாளர்கள் தங்கள் நம்பிக்கையை திணிக்காமலும், வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும் அமைதியுடனும் தங்கள் உள்ளங்களைத் திறக்கிறார்கள், உலகத்திலும், அவர்கள் வாழும் சூழல்களிலும் புளிக்காரமாக விளங்குகின்றார்கள். நம்பிக்கையற்றவர்கள் அல்லது மதங்களிருந்து விலகியிருப்பவர்கள் உண்மையை, நீதியை, ஒற்றுமையைத்தேடும் தேடலில் இருந்து விலகியிருப்பவர்கள் அல்ல. அந்நியர்களுமல்ல மாறாக எந்த மதத்தையும் சாராத அவர்கள் தங்கள் இதயங்களில் அதிகப்படியான தாகத்தையும் வாழ்க்கை அர்த்தத்திற்கான கேள்வியையும் கொண்டவர்கள். இக்கேள்விகளும் தாகமும் அவர்களை வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்குவதற்கான மறைபொருளையும் பொது நலனுக்கான அடிப்படை மதிப்புகளையும் தேடுவதற்கு வழிநடத்துகிறது.

மக்களின் கலாச்சாரத்தில் வேரூன்றிய எளிய சைகைகள் மற்றும் குறியீட்டு மொழிகள், நம்பிக்கையை வெளிப்படுத்துவதன் வழியாக மதங்களின் பக்தி வரலாற்றின் உயிருள்ள வடிவத்தில் கடவுளின் இருப்பை வெளிப்படுத்துகின்றன. திருஅவையுடனான உறவை பலப்படுத்துகின்றன. கலாச்சார பரிமாற்றம் கொண்டாட்டத்திற்கான ஒரு சந்தர்ப்பமாக மாறி, இறைவனுடனான உறவையும் நம்பிக்கையின் உள்ளடக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன.

இறையியல் மற்றும் மேய்ப்புப்பணி பகுத்தறிவுடன் கண்காணிக்கப்பட வேண்டிய மதங்களில் செயல்பாடுகள் மற்றும் வெளிப்பாடுகள் கிறிஸ்துவுடனான சந்திப்பிற்கு வழிவகுக்காமல் வெளிப்புற வடிவங்களுக்குள் கட்டுப்படும் அபாயம் உள்ளது. இதிலிருந்து விழிப்புணர்வுடன் பகுத்தறிந்து வாழவும், வாழ்க்கையின் தொடர்ச்சியான கவனத்தை ஊக்குவிக்கவும் நாம் அழைக்கப்படுகின்றோம்.

கிறிஸ்தவ நம்பிக்கையையும், மக்களின் கலாச்சார விழுமியங்களையும், இதயங்களையும் ஒன்றிணைத்து, ஒரு சமூகத்தை ஒன்றிணைப்பதில் மக்களின் பக்தி முயற்சிகள் வெற்றி பெறும்போது அதிலிருந்து முழு சமூகம், திருஅவை, மற்றும் அரசியல் அமைப்புகளுக்கு இடையிலான உறவுகளுக்கு பலன்  கிடைக்கின்றது. நம்பிக்கை என்பது ஒரு தனிப்பட்ட உண்மையாக இல்லாமல் மனித வளர்ச்சி, சமூக முன்னேற்றம், படைப்பின் அக்கறை, அர்ப்பணிப்பு மற்றும் அனைவருக்கும் சான்றாக தொண்டுப் பணிகளின் அடையாளமாக விளங்குகின்றன.

திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் கூறியது போல், ஆரோக்கியமான மதச்சார்பின்மை என்பது “அரசியலின் சுமையிலிருந்து மதத்தை விடுவித்து, மதத்தின் பங்களிப்புகளால் பிந்தையதை வளப்படுத்துவது, அவற்றுக்கிடையே தேவையான தூரத்தைப் பேணுவது, தெளிவான வேறுபாடு மற்றும் இரண்டுக்கும் இடையே தேவையான ஒத்துழைப்பைப் பேணுவது ஆகும். இத்தகைய ஆரோக்கியமான மதச்சார்பின்மை, மதத்தை கருவியாக்காமல் அரசியல் செயல்படுவதை உறுதி செய்கிறது.

ஆரோக்கியமான இலட்சியங்கள் மற்றும் பொது நலனுக்கான ஆர்வத்துடன், சமூக-கலாச்சார மற்றும் அரசியல் வாழ்க்கையில் இன்னும் தீவிரமாக ஈடுபட இளைஞர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். மறைப்பணியாளர்கள் மற்றும் விசுவாசிகள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுப் பொறுப்புகளில் இருப்பவர்கள் எப்போதும் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும், அவர்களின் தேவைகளைக் கேட்டு, அவர்களின் துன்பங்களைப் புரிந்துகொண்டு, அவர்களின் நம்பிக்கைகளை வளர்க்க வேண்டும் அதிகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது கருத்துக்களை நிறைவு செய்ததும் அங்கிருந்து புறப்பட்டார். மாநாடு நடைபெற்ற இடத்தின் வெளிப்புறத்தில் இளையோர் சிலர் வண்ண நில பலூன்களை பறக்கவிட்டு  மகிழ்ந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 December 2024, 17:48