அஜாக்சியோ விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

அஜாக்சியோ மறைமாவட்ட ஆயர்கள் அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவறத்தார், குருத்துவ மாணவர்களை விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மதங்கள் தொடர்பான மாநாட்டில் பங்கேற்று விடைபெற்று, அங்கிருந்து அஜாக்சியோ தலத்திருஅவையின் பாதுகாவலரான அன்னை மரியின் திரு உருவசிலையை நோக்கிப் பயணித்த திருத்தந்தை அவர்கள், அன்னை மரியின் திரு உருவம் முன் மெழுதிரி ஏற்றி சிறிது நேரம் அமைதியில் செபித்தார். அன்னை மரியாவிற்கு புகழ் பாடல்கள் பாடகர் குழுவினரால் பாடப்பட்டது. அதன்பின் அங்கிருந்து புறப்பட்ட திருத்தந்தை அவர்கள், அஜாக்சியோ விண்ணேற்பு அன்னை ஆலயத்தை வந்தடைந்தார்.

அஜாக்சியோ விண்ணேற்பு அன்னை ஆலய முகப்பில் பாடகர் குழுவினர் பாடல்கள் பாடி திருத்தந்தையை வரவேற்க புனித நீர் கொண்டு ஆசீரளித்து ஆலயத்திற்குள் நுழைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். சிறுவர் குழாம் திருத்தந்தையை பாடல் பாடி வரவேற்க பாடலின் முடிவில் அச்சிறாரையும் அவர்களை வழிநடத்தியவர்களையும் தனித்தனியாக கரம்குலுக்கி வாழ்த்தினார். உங்களது புன்னகையை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள் என்று திருத்தந்தை அக்குழுவினரை வாழ்த்த பிரான்ஸ் நாட்டின் ஆயர் பேரவை தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்றார். அதன்பின் அம்மறைமாவட்ட ஆயர்கள் அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவறத்தார், குருத்துவ மாணவர்களை சந்தித்து தனது 47 ஆவது திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது உரையினை வழங்கினார். திருத்தந்தையின் உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

கடவுளின் இரக்கமுள்ள அன்பின் அடையாளமாகவும், நற்செய்தியின் சாட்சிகளாகவும் இருப்பதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. "நன்றி" என்பதிலிருந்து நான் உடனடியாக கடவுளின் அருளிற்குத் திரும்புகிறேன். ஐரோப்பிய சூழலில்,கிறிஸ்தவ நம்பிக்கையைப் பரப்புவதில் சிக்கல்கள் மற்றும் சவால்களுக்கு ஒருபோதும் பஞ்சமில்லை, ஒவ்வொரு நாளும் நீங்கள் இதை எண்ணி, உங்களை சிறியவர்களாகவும் உடையக்கூடியவர்களாகவும் கண்டுபிடிப்பீர்கள்: நீங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் ஆற்றல் வாய்ந்த வழிகள் உங்களிடத்தில் உள்ளன. இத்தகைய வறுமையைக் கடவுளின் வரமாகக் கருதவேண்டும். கிறிஸ்தவப் பணி மனித பலத்தை சார்ந்தது அல்ல, மாறாக அது இறைவனைச் சார்ந்தது. நாம் நம்மை சிறிதளவு அவருக்கு வழங்கும் போது அவர் நம்மை வைத்து பெரிய காரியங்களை ஆற்றுவார். கடவுளை நமது வாழ்வின் முதன்மையாக மையமாக வைத்து செயல்பட வேண்டும். நம்மை அல்ல மாறாக கடவுளை வைத்து நமது நாளின் ஒவ்வொரு செயல்களையும் நாம் செய்ய வேண்டும். “இன்றும் எனது பணியில் நான் அல்ல கடவுளே மையமாக இருக்க வேண்டும் என்ற செபத்தை அடிக்கடி செபிக்கவேண்டும்.

முதல் கொடையாம் இறை அருள் என்பது  நாம் கனவுகளுடன் நிம்மதியாக தூங்கலாம் என்பதை அடையாளப்படுத்தவில்லை மாறாக நாம் கடவுளது அருளின் உடன் பணியாளர்களாக நம்மைக் கருதி உழைக்கவேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றது. நான் எனது அர்ப்பண வாழ்வை எப்படி வாழ்கின்றேன் இயேசுவின் முழுமையான சீடராக இருக்கின்றேனா என்ற கேள்விகளை நமக்குள் கேட்கவேண்டும். மிகவும் முக்கியமான இக்கேள்வியை தயவு செய்து நமது இதயத்தில் நிறுத்தி சிந்திப்போம். நம்மை நாம் கவனித்துக் கொள்ளவும் பிறரைக் கவனித்துக் கொள்ளவும் நாம் அழைப்பு பெற்றுள்ளோம்.

நம்மைக் கவனித்துக் கொள்ளுதல்

நமது அர்ப்பண வாழ்வில் நாம் கூறிய ஆம் என்ற பதிலானது வாழ்வின் எல்லா நிலைகளிலும் புதுப்பிக்கப்பட வேண்டும்.  ஒவ்வொரு நாளும் இயேசுவுடனான சந்திப்பில் அது புதுப்பொழிவு பெற வேண்டும். அவரது குரலைக் கேட்டு அவரைப் பின்பற்ற வேண்டும். நாள்முழுவதும் மக்கள் பணியாற்றி இல்லம் திரும்பும் நாம் இரவு நித்திரைக்குச் செல்வதற்கு முன் திருநற்கருணை முன் சென்று அங்கு வீற்றிருக்கும் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும். இயேசுவை நமது உற்ற நண்பராகக் கருதி வாழ வேண்டும்.

இறையரசுப் பணிக்காக நம்மையே அர்ப்பணித்துள்ள நாம் நம்மைக் கவனித்துக் கொள்வது மிக முக்கியமானது. அதற்கு நமது வாழ்க்கை நடைமுறைகளில் ஓர் ஒழுங்கு தேவை. குழுசெபம், திருநற்கருணை ஆராதனை என எல்லாவற்றிற்கும் குறிக்கப்பட்ட நேரம் இருந்தாலும் இறைவனுடனான தனிப்பட்ட சந்திப்பிற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நமது தனிப்பட்ட உணர்வுகளை கருத்துக்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன் வழியாக நேரத்தைக் கடத்தாமல் நமது  மறைப்பணி பளுவிலிருந்து சற்று ஓய்வு பெற என்று அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்வழியாக சகோதரத்துவ உறவானது நமக்குள் வளர்கின்றது. துன்பங்கள் துயரங்களை மட்டுமன்று மகிழ்ச்சி மற்றும் நட்புறவையும் நாம் பகிர்ந்துகொள்ளலாம்.

பிறரைக் கவனித்துக் கொள்ளுதல்

இயேசுவை மற்றவர்களுக்கு கொண்டு செல்வது, இதயங்களுக்கு நற்செய்தியின் ஆறுதலைக் கொடுப்பது என்னும் உயரிய கொடையை அழைக்கப்பட்ட ஒவ்வொருவரும் நமது பணியின் ஒரே ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளோம். நான் உங்களுக்காக எனக்குள்ளவற்றையும், ஏன் என்னையுமே மனமுவந்து அளித்திடுவேன். உங்கள் மீது நான் இத்துணை அன்பு கொண்டிருக்க நீங்கள் என்மீது கொண்டுள்ள அன்பு குறையலாமா? என்று திருத்தூதர் பவுல் வலியுறுத்துவது போல ஒப்படைக்கப்பட்டவர்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளுதல் அவசியம்.

உங்கள் இறைப்பணியின் மையத்தில் நம் உடன் சகோதர சகோதரிகள் உள்ளனர்: அவர்களின் ஆன்மிக நன்மை, நம்பிக்கைக்கான அவர்களின் பசி, செவிசாய்த்தல் மற்றும் நெருங்கிய தேவையில் நாமே இருக்கின்றோம். இன்றைய சூழலில், நற்செய்தி அறிவிப்பின் மிகவும் பயனுள்ள மேய்ப்பு வழிகளைக் கண்டறிய இது ஒரு அழைப்பாக உள்ளது. பழையவற்றை மாற்றவும், பழைய வடிவங்களைத் திருத்தவும், நம்பிக்கையின் மொழிகளைப் புதுப்பிக்கவும் பயப்பட வேண்டாம். பணி என்பது மனித உத்திகளின் விஷயம் அல்ல அது முதன்மையானது நம்பிக்கை, ஆர்வத்தை அடைப்படையாகக் கொண்டது. நற்செய்திக்காகவும் கடவுளின் அரசிற்காகவும், மற்றவர்களைக் கவனித்துக்கொள்ள நாம் அழைப்பு பெற்றுள்ளோம். இயேசுவின் வார்த்தைக்காகக் காத்திருப்பவர்கள், அவரிடமிருந்து விலகிச் சென்றவர்கள், தங்கள் துன்பங்களுக்கு வழிகாட்டுதல் அல்லது ஆறுதல் தேவைப்படுபவர்கள், போன்றோர் அனைவரையும் சந்தித்து கவனித்துக்கொள்ள வேண்டும்.  சோர்வு அல்லது மனக்கவலைகளுக்கு இடம் கொடாமல் நம்பிக்கையுடன் மகிழ்ச்சியுடனும் நமது பணிகளை செய்வோம். துணிவுடன் நமது பணிகளை நாம் செய்யும்போது கடவுள் நம்மை மகிழ்ச்சியால் நிரப்புவார்.

விண்ணேற்பு அன்னையின் ஆலயத்தில் இருக்கும் நாம் மடுன்னிசியா என்றழைக்கப்படும் அன்னை மரியிடம் உலக மக்களுக்காக செபிப்போம். மத்திய தரைக்கடல் தீவில் இருந்து, அமைதிக்கான வேண்டுகோளை எழுப்புவோம். இயேசுவைப் பெற்றெடுத்த புனித பூமியில் அமைதி நிலவவும், பாலஸ்தீன், இஸ்ரயேல், லெபனோன், சிரியா, உக்ரைன், முழு மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அமைதி கிடைக்க செபிப்போம். எப்போதும் தோல்வியைத்தரும் போர் நிறுத்தப்பட்டு உலகம் முழுவதும் அமைதி நிலவ அமைதியின் அரசியாம் அன்னை மரியிடம் வேண்டுவோம். இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது கருத்துக்களை நிறைவு செய்து மூவேளை செப உரையினை செபித்து கூடியிருந்த அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 December 2024, 17:53