இத்தாலிய வங்கி நிறுவன பிரதிநிதிகளுடன் திருத்தந்தை இத்தாலிய வங்கி நிறுவன பிரதிநிதிகளுடன் திருத்தந்தை  (VATICAN MEDIA Divisione Foto)

வங்கிகள் வாய்ப்புக்களுக்கானக் கதவுகளைத் திறக்கின்றன

வரவிருக்கும் யூபிலி ஆண்டு கடன்களை மன்னிக்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு நினைவூட்டுகிறது, ஏழைகளின் வாழ்வில் எதிர்நோக்கையும் சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்குவதற்கான கடமையாகவும் இருக்கின்றது

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருஅவை சமூகத்தில் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள ஆண்களும் பெண்களும் வங்கிகள், கூட்டுறவு கடன் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற வங்கிகளை ஊக்குவித்து உருவாக்கியுள்ளனர் என்றும், வாய்ப்புகள் இல்லாதவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதை தனது நோக்கமாகக் கொண்டு செயல்படும் வங்கிகள் ஏழை எளிய மக்களுக்கு வாய்ப்புகளுக்கானக் கதவுகளைத் திறப்பது மிகவும் அழகானது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 16 திங்கள் கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் இத்தாலிய வங்கி நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஏறக்குறைய 400 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியான பொருளாதாரத்தை ஆதரிப்பதில் வங்கி நிறுவனங்களுக்கு பெரும் பொறுப்புகள் உள்ளன என்றும் வலியுறுத்தினார்.

நிதியானது மக்களை மிதித்து, ஏற்றத்தாழ்வுகளை தூண்டி, உள்ளூர் வாழ்க்கையிலிருந்து தூர விலக்கி, அதன் நோக்கத்தை இழக்கும்போது ஒரு நாகரீகமற்ற பொருளாதாரமாக மாறுகின்றது, அது நாகரீகம் இல்லாதது போல் மாறுகின்றது என்றும், போதுமான நிதி அமைப்புகள் இல்லாமல், நிலைத்தத்தன்மையை உள்ளடக்கிய ஊக்குவிக்கும் திறன், ஒருங்கிணைந்த மனித வளர்ச்சி இருக்காது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

நிதி என்பது பொருளாதாரத்தின் "சுற்றோட்ட அமைப்பு" போன்றது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இது சில இடங்களில் தடுக்கப்பட்டு முழு சமூக உடலிலும் பரவாமல் இருக்கும்போது பேரழிவு தரும் மாரடைப்பு  போன்று பொருளாதாரத்தில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன என்றும் கூறினார்.

வரவிருக்கும் யூபிலி ஆண்டு  கடன்களை மன்னிக்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு நினைவூட்டுகிறது என்றும், ஏழைகளின் வாழ்வில் எதிர்நோக்கையும் சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்குவதற்கான கடமையாகவும் இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 December 2024, 14:29