Orbe 21 தொலைக்காட்சி நிகழ்ச்சி நேர்காணலின்போது திருத்தந்தை  Orbe 21 தொலைக்காட்சி நிகழ்ச்சி நேர்காணலின்போது திருத்தந்தை  

போர் என்பது சுயஅழிவை நோக்கிய உலகளாவிய போக்கு

மனிதகுலம் மற்றும் திருஅவையின் பிரச்சினைகளை அரவணைத்து, உரையாடலின் வழியே அவற்றைத் தீர்க்க திருஅவை முயல்கிறது" - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

அமைதிக்கான வேண்டுகோள்கள் அனைத்தும் ஒரு காது வழியாகச் சென்று மற்றொறு காது வழியாக வெளியேறுவது கவலையடையச் செய்கிறது என்றும், போர் என்பது சுய அழிவை நோக்கிய உலகளாவிய போக்கு என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்ஜென்டினா தொலைக்காட்சி நிறுவனமான Orbe 21 க்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி, போர், யூபிலி ஆண்டு, உரையாடல், உக்ரைன் சூழல், வெறுப்பு என்னும் தீமை, மன்னிப்பு கேட்கும் திறன், ஒருங்கிணைந்த பயணமும் செவிசாய்த்தலும், எல்லாருக்குமான திருஅவை என்பன பற்றிய தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பன்னாட்டு அமைப்புகளின் அமைதிக்கான பல அழைப்புகள் எந்த விதமான பலன்களையும் தராமல் இருப்பது கவலை அளிக்கிறது, அடிப்படை பாசாங்குத்தனம் அதில் உள்ளது என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், அமைதியைப் பற்றியும் பேசுகிறோம், போருக்கு ஆயுதமும் தருகிறோம் என்று சிலர் இருக்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் முதலீடு செய்வதில் மிகப்பெரிய வருமானம் ஆயுத தொழிற்சாலைகள் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், மாநாடுகள் மற்றும் அமைதிக் கூட்டங்களை ஏற்பாடு செய்யும் அதே நேரத்தில் மக்களைக் கொலை செய்வதற்கான ஆயுதங்களும் தயாராகின்றன என்றும் , உக்ரைன் மற்றும் காசாவில் மக்கள் காரணமின்றி சுட்டுக் கொல்லப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

"உரையாடல் இல்லை என்றால், அமைதி இருக்காது" என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், மனிதகுலம் மற்றும் திருஅவையின் பிரச்சினைகளை அரவணைத்து, உரையாடலின் வழியே அவற்றைத் தீர்க்க திருஅவை முயல்கிறது" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருஅவைக்குள் இருக்கும் நாம் யாரும் புனிதர் அல்ல, நாம் அனைவரும் பாவிகளே, நமது குறைபாடுள்ள சூழ்நிலைகளைத் தீர்க்க திருச்சபை நமக்கு உதவுகிறது என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், நம் மோதல்களில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கவும், மேலே இருந்து தளம் வெளியே வரவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 December 2024, 15:40