OSCE கூட்டம் மால்ட்டாவில் OSCE கூட்டம் மால்ட்டாவில் 

உரையாடல், ஒத்துழைத்தல் போன்றவைகளின் பலனாக அமைதி

சவால்களை எதிர்நோக்கும் உலகில் OSCE நிறுவனத்தின் கொள்கைகளான, கலந்துரையாடல் மற்றும் உடன்பாடு காணுதலின் அடிப்படையில் அனைத்தும் அணுகப்படவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகின் சவால்களில் இருந்து எழும் பிரச்சனைகளின் விளைவுகளை உற்று நோக்கி, ஐரோப்பாவில் எழுந்துள்ள பிரிவினைகள் குறித்து அக்கறை கொண்டவர்களாக ஐரோப்பிய சமுதாயம் செயல்படவேண்டும் என திருப்பீடம் அழைப்பு விடுத்துள்ளது.

OSCE எனப்படும் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு நிறுவனம் துவக்கப்பட்டதன் 50ஆம் ஆண்டு 2025ல் சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு மால்டாவில் இந்த டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் திருப்பீடத்தின் சார்பில் கலந்துகொண்ட பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், எந்த நோக்கத்திற்காக இந்த நிறுவனம் துவக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு விரோதமானதாக இன்றைய பிரிவினை நிலைகள் இடம்பெற்றுவருகின்றன என திருப்பீடத்தின் கவலையை வெளியிட்டார்.

ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்தின் 57 உறுப்பினர் நாடுகளிலிருந்து 40 உறுப்பினர்களும், ஆசியா மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளைச் சேர்ந்த ஒத்துழைப்பு அங்கத்தினர்களும் கலந்துகொள்ளும் இந்த இரு நாள் கூட்டத்தில் இன்றைய ஐரோப்பா எதிர்நோக்கிவரும் நிலைகள் குறித்து விவாதிக்கப்பட்டுவருகின்றது.

1975ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட OSCE நிறுவனத்தின் அடிப்படையான Helsinki இறுதி ஏட்டில் காணப்படுபவைகளின் துணை கொண்டு இன்றைய உலகின் புதிய சவால்கள் அணுகப்படவேண்டும் என இக்கூட்டத்தில் அழைப்புவிடுத்தார் வெளிநாட்டு விவகாரங்களுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் காலகர்.

போரற்ற நிலை என்பது அமைதியாகாது, மாறாக ஒருவருக்கொருவர் உரையாடுதல், ஒத்துழைத்தல் போன்றவைகளின் பலனாக அமைதி இருக்கவேண்டும் என்ற பேராயர், அனைத்து மனித உரிமைகளும் மதிக்கப்படுவதும் இதில் உள்ளடக்கப்படவேண்டும் என்றார்.

உக்ரைன் போர், OSCE அங்கத்தினர் நாடுகளிடையேக் காணப்படும் எல்லைப் பதட்டநிலைகள் போன்றவை குறித்தும் எடுத்துரைத்த பேராயர் காலகர் அவர்கள், பெரும் சவால்களை எதிர்நோக்கும் இன்றைய உலகில் OSCE நிறுவனத்தின் அடிப்படைக் கொள்கைகளான, கலந்துரையாடல், உடன்பாடு காணுதல் என்பவைகளின் அடிப்படையில் அனைத்தும் அணுகப்படவேண்டும் என மேலும் அழைப்புவிடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 December 2024, 15:50