யூபிலியையொட்டி புனித பேதுரு பெருங்கோவிலில் தயாரிப்பு விழா!

புனித பேதுரு பெருங்கோவிலில் அதன் தலைமைப்பீடப் பணியாளர் கர்தினால் Mauro Gambetti அவர்களின் தலைமையில் Recognitio எனப்படும் தயாரிப்புத் திருச்சடங்குகள் நிகழ்த்தப்பட்டன : திருப்பீடச் செய்தித் தொடர்பகம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இம்மாதம் 24-ஆம் தேதி மாலை புனிதக் கதவைத் திறந்து யூபிலி விழாவைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடங்கிவைக்கவிருக்கும் வேளை, அதுகுறித்த தயாரிப்பு நிகழ்வொன்று புனித பேதுரு பெருங்கோவிலில் அதன் தலைமைப்பீடப் பணியாளர் கர்தினால் Mauro Gambetti அவர்களின் தலைமையில் நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 2, இத்திங்களன்று மாலை சிறியதொரு இறைவழிபாட்டுடன் இத்தயாரிப்பு நிகழ்வு இடம்பெற்றது என்றும், இம்மாத இறுதியில் நிகழவிருக்கும் புனிதக் கதவு திறப்புக் குறித்த எதிர்பார்ப்பை இந்நிகழ்வு அதிகரித்துள்ளது என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கின்றது.

இந்தத் திருச்சடங்கானது, கடந்த யூபிலி ஆண்டின் முடிவில் மூடப்பட்ட புனிதக் கதவு அப்படியே உள்ளது என்பதையும், புதிய புனித ஆண்டிற்காக அது மீண்டும் திறக்கப்படத் தயாராக உள்ளது என்பதையும் உறுதிப்படுத்த நடத்தப்படுகிறது என்றும் அச்செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் இத்திருச்சடங்கை அறிமுகம் செய்து தொடங்கிவைத்த கர்தினால் Mauro Gambetti அவர்கள், புனிதர்களின் இறைவேண்டலுடன் சிறியதொரு பவனியை வழிநடத்தினார் என்றும், பின்னர், பேதுரு பெருங்கோவிலிலுள்ள பராமரிப்புப் பணியாளர்கள், பெருங்கோவிலுக்குள் புனித கதவை மூடும் சுவரை அகற்றி, இரக்கத்தின் யூபிலி விழா முடிந்த நாளான நவம்பர் 20, 2016 அன்று, அங்குப் பதிக்கப்பட்டிருந்த உலோகப் பெட்டியை அகற்றினர் என்றும், இறுதியில் அப்பெட்டித் திறக்கப்பட்டு திருச்சடங்குகள் நிகழ்த்தப்பட்டன என்றும் உரைக்கிறது அச்செய்தித் தொகுப்பு.

உலோகப் பெட்டியில் உள்ள பொருள்கள்

பெட்டியின் உள்ளே புனிதக் கதவின் திறவுகோல், அதன் கைப்பிடிகள், அதன் மூடப்பட்டதை ஆவணப்படுத்தும் காகிதத்தோல் Rogito, நான்கு தங்க செங்கற்கள் மற்றும் திருத்தந்தையர் பிரான்சிஸ், பதினாறாம் பெனடிக்ட் மற்றும் இரண்டாம் யோவான் பால் ஆகியோரின் ஆளுமை பணிக்காலக் குறிப்புகள் உட்பட பல பதக்கங்கள் இருந்தன.

இத்திருச்சடங்கில் நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீடத் துறையின் தலைவர், பேராயர் Rino Fisichella அவர்கள், மற்றும் பாப்பிறை வழிபாட்டு விழாக்களின் தலைவர் பேராயர் தியேகோ ரவெல்லி ஆகியோர் கலந்து கொண்டனர் என்றும், அவர்கள் Recognitio என்னும் தயாரிப்பு நிகழ்விலிருந்து ஆவணங்கள் மற்றும் பொருட்களைப் பெற்று, பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் ஒப்படைத்தனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மற்ற பாப்பிறை பெருங்கோவில்களில் விழாக்கள்

இதேபோன்ற ஒரு தயாரிப்பு நிகழ்வுகள் மடிசம்பர் 3-ஆம் தேதி செவ்வாயன்று, புனித ஜான் இலாத்தரன் பெருங்கோவிலில் புனிதக் கதவின் முன்பு நடந்தது என்றும், அவ்வாறே, டிசம்பர் 5-ஆம் தேதி வரும் வியாழக்கிழமையன்று, புனித பவுல் பெருங்கோவிலிலும், டிசம்பர் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, புனித  மேரி மேஜர் பெருங்கோவிலிலும் இந்தச் திருச்சடங்குகள் இடம்பெறும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2024, 15:04