புனித பேதுரு பெருங்கோவில் சதுக்கத்தில் ஒளிர்விக்கப்பட்டு வரும் புதிய விளக்குகள் புனித பேதுரு பெருங்கோவில் சதுக்கத்தில் ஒளிர்விக்கப்பட்டு வரும் புதிய விளக்குகள்  

மின்னொளியில் ஒளிரப்போகும் தூய பேதுரு பெருங்கோவில் வளாகம்!

Acea குழுமம் மற்றும் பேராயர் ரீனோ பிசிகெல்லா ஆகியோர் புனித பீட்டர் சதுக்கத்தில் புதிய ஒளிக் கட்டிடக்கலை மற்றும் திருப்பயணிகளுக்கான நீர் வசதிகளை யூபிலி ஆண்டிற்காகத் திறந்து வைக்கவுள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் சதுக்கத்தின் தூண்களிலுள்ள 140 புனிதர்களின் திருவுருவங்களும் மின்னொளியில் ஒளிரும் வண்ணம் புதிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், உரோமையிலுள்ள முக்கிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் திருப்பயணிகளுக்கு இலவச குடிநீர் வழங்க 14 "நீர் வீடுகள்" நிறுவுதல் மற்றும் நகரின் நீர் ஆதாரங்களை அணுகுவதற்கு ஒரு செயலி (app) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இம்மாதம் 24-ஆம் தேதி 'எதிர்நோக்கின் திருப்பயணிகள்' என்ற தலைப்பில் தொடங்கப்படவிருக்கிற யூபிலி ஆண்டை முன்னிட்டு, உரோமை நகராட்சியில் ஆற்றல், நீர் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகளுக்குப் பொறுப்பான உரோமையின் பயன்பாட்டுக் குழுவான Acea குழுமத்தால் இந்தப் புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படவிருக்கின்றன என்றும் அச்செய்தியாளர் சந்திப்பின்போது கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 16, இத்திங்களன்று, வத்திக்கானில் இடம்பெற்ற இந்தச் செய்தியாளர் கூட்டத்தில், Acea-வின் உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் நற்செய்தி அறிவிப்பு திருப்பீடத்துறையின் தலைவரும் யூபிலி 2025-இன் ஒருங்கிணைப்பாளருமான பேராயர் ரீனோ பிசிகெல்லா ஆகியோரால் இந்தப் புதிய திட்டங்கள் குறித்த செய்திகள் வழங்கப்பட்டன.

பேராயர் ரீனோ பிசிகெல்லாவுடன்  Acea குழுமத்தினர்
பேராயர் ரீனோ பிசிகெல்லாவுடன் Acea குழுமத்தினர்

உரோமை நகராட்சியில் பொது மற்றும் கலை விளக்குகளுக்குப் பொறுப்பான குழுவின் நிறுவனமான அரேட்டியால் (Areti) மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான திட்டங்களில் இதுவும் ஒன்று எனவும், அவர்கள் "புனிதர்களின் அவை" என்று அழைக்கப்படும் புனித பேதுரு சதுக்கத்தின் தூண்களின் மீதுள்ள திருவுருவங்களின் விளக்குகளைப் புதுப்பித்து மேம்படுத்தியுள்ளனர் என்றும் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 December 2024, 12:50