காசாவில் திருப்பலியின்போது முதுபெரும்தந்தை பிஸ்ஸாபால்லா. காசாவில் திருப்பலியின்போது முதுபெரும்தந்தை பிஸ்ஸாபால்லா.  (AFP or licensors)

கிறிஸ்துவின் ஒளியைக் கொண்டு வருபவர்களாக வாழுங்கள்

கிறிஸ்துவின் ஒளியைக் கொண்டு வருவதற்கு உலக மக்களுக்கு முன்மாதிரிகையாக காசா கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள் - முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிஸ்ஸாபால்லா.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கிறிஸ்துவின் ஒளியைக் கொண்டுவருபவர்களாக வாழும் காசா கிறிஸ்தவ மக்களுடன் உலக மக்கள் இருக்கின்றார்கள் என்றும், எல்லாச்சூழலிலும் இயேசு கிறிஸ்துடன் கிறிஸ்தவர்களாக நிலைத்து நின்ற செயல் குறித்து பெருமிதம் அடைகின்றோம் என்றும் கூறினார் முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிஸ்ஸாபால்லா.

டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை காசாவில் உள்ள திருக்குடும்ப பங்கு ஆலயத்தில் இருந்த கிறிஸ்தவ மக்களுக்கு வழங்கிய திருப்பலி மறையுரையின்போது இவ்வாறு எடுத்துரைத்த எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் Pierbattista Pizzaballa அவர்கள், 14 மாதங்களுக்கும் மேலாக அகதிகளாக இருந்த அம்மக்களுக்கு உலக மக்கள் எல்லாரும் உங்களுடன் இருக்கின்றார்கள் என்று உறுதியூட்டினார்.

எருசலேமை, இஸ்ரயேல் இராணுவ வீரர்களைக் கடந்து காசா பகுதிக்குள் வந்து அங்கிருக்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டிய இச்செயலானது கிறிஸ்து பிறப்பு அடையாளத்தை வெளிப்படுத்தும் முதல் ஒளி என்றும், கிறிஸ்து பிறப்பை தங்களது பங்குத்தளத்தில் ஆயருடன் கொண்டாட வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கும் கிறிஸ்தவ மக்களுக்கு மகிழ்வின் அடையாளம் என்றும் கூறினார் முதுபெரும்தந்தை பிஸ்ஸாபால்லா.

காசா கிறிஸ்தவர்கள் திருஅவையின் ஒளியாக இருக்கின்றார்கள் என்றும், கிறிஸ்து பிறப்பு ஒளியின் திருவிழா என்றும் எடுத்துரைத்த கர்தினால் பிஸ்ஸாபால்லா அவர்கள், கிறிஸ்துவின் ஒளியைக் கொண்டு வருவதற்கு உலக மக்களுக்கு முன்மாதிரிகையாக காசா கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள் என்றும் கூறினார்.

கடந்த மே 16 ஆம் தேதி பிஸ்ஸாபால்லா காசாவிற்குள் நுழைந்து பங்கு அருள்பணியாளர் கேப்ரியல் ரோமானெல்லி தலைமையிலான சமூகத்தைப் பார்வையிட முடிந்த நிலையில் அங்குள்ள சிறிய கிறிஸ்தவ குழுமத்திற்கு திருப்பலி ஆற்றுவது இது இரண்டாவது முறையாகும் என்று எடுத்துரைத்தார் முதுபெரும்தந்தை பிஸ்ஸாபால்லா.

டிசம்பர் 24 கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் முந்தின நாளன்று பெதல்கேம் பகுதிக்குச் செல்ல இருக்கும் கர்தினால் பிஸ்ஸாபால்லா அவர்கள், புனித கேத்தரின் ஆலயத்தில் அங்குள்ள துன்புறும் கிறிஸ்தவ மக்களுக்கு நள்ளிரவு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலியினை சிறப்பிக்க இருக்கின்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 December 2024, 10:46