தொற்றுநோய்க்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண் தொற்றுநோய்க்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண்  (ANSA)

வாரம் ஓர் அலசல் : டிச. 27, தொற்றுநோய் எதிர்ப்பு தயாரிப்பு தினம்

பக்கவிளைவுகள் இல்லாத இயற்கையான கிருமி நாசினிகள் நம்மை சுற்றியுள்ள மரங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அதில் வேம்பு கிருமி நாசினிகளின் முதன்மை மரமாகும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தொற்று நோய்கள் வருகின்றன, போகின்றன. சில நேரம் நம்முடனேயே தங்கியும் இருக்கின்றன. பொன்னுக்கு வீங்கி, சின்னம்மை, மணல்வாரி, தட்டம்மை, காசநோய், கக்குவான் இருமல், தொண்டை அழற்சி போன்றவை நாம் அடிக்கடி கேள்விப்படும் தொற்று நோய்கள். இவை நம்மை விட்டு முற்றிலுமாக அகலுவதாக இல்லை. நோய்கள் மீண்டும் தோன்றி இயற்கையில் மீண்டும் எழுகின்றன. எந்தவொரு தொற்றும், அது பாக்டீரியா, வைரஸ் அல்லது வேறு எந்த வகையாக இருந்தாலும், எப்போதாவது மீண்டும் தோன்றுவதற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன. சமீபகாலமாக மீண்டும் உருவாகி வரும் நோய்க்கிருமியால் ஏற்படும் திடீர் எதிர்கால அவசரச் சூழ்நிலையை எதிர்த்துப் போராடுவதற்கு பண்டைய கால நோய்களைப் பற்றிய விழிப்புணர்வும் அவற்றின் விவரத் தகவல்களும் முக்கியம். இதனை கருத்தில்கொண்டுதான் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் 27ஆம் தேதியை தொற்று நோய்களை எதிர்கொள்வதற்கு தயாரிப்பது குறித்த விழிப்புணர்வு நாளை உலகம் சிறப்பிக்கிறது. தொற்று நோய்களுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை கோவிட் பெருந்தொற்று நமக்குக் கற்றுத் தந்தது. தொற்று நோய்கள் மனித வரலாறு முழுவதும் ஒரு தொடர்ச்சியான சவாலாக உள்ளன. தீவிரத்தைப் பொறுத்தவரையில் அண்மைக் காலங்களில் நாம் கண்ட கோவிட்-19 நம்மை மிகப்பெரிய அளவில் வாட்டி வதைத்துவிட்டது. சமூகங்கள் மற்றும் சுகாதார அமைப்புகளில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய பல தொற்று நோய் பரவல்களை வரலாறு கண்டுள்ளது. 1918இல் இஸ்பானிய காய்ச்சல் தொற்றுநோய், 1980களில் எச்.ஐ.வி\எய்ட்ஸ், மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா நோய் பரவல், ஜிகா வைரஸ் தொற்றுநோய், அண்மையில்  கோவிட்-19 தொற்றுநோய் என வரலாற்றில் சுவடுகள் அழுத்தமாகப் பதிந்துள்ளன. அவற்றையெல்லாம் நாம் தாண்டி வந்துவிட்டாலும், இவைகள் நமக்கு விட்டுச்செல்லும் பாடங்கள் கணக்கற்றவை. சரியான நேரத்தில் தலையீட்டின் முக்கியத்துவத்தை அழுத்தமாக இவை நினைவூட்டுகின்றன. மலேரியா, காசநோய், எச்ஐவி, எய்ட்ஸ், டெங்கு காய்ச்சல், எபோலா போன்ற வளர்ந்து வரும் நோய்க்கிருமிகள் நமது நலஅமைப்புகளுக்கு தொடர்ந்து சவால் விட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

இதற்கான காரணங்களையும் அடுக்கிக்கொண்டேப் போகலாம். விரைவான நகரமயமாக்கல், பன்னாட்டுப் பயணம் மற்றும் வர்த்தகம் அதிகரித்தது, காலநிலை மாற்றங்கள், நுண்ணுயிர் எதிர்ப்பின் அதிகரிப்பு போன்றவை சில காரணங்கள். இவை நோய்க்கிருமிகளின் பரவலுக்கு உகந்த சூழலை உருவாக்குகின்றன. கோவிட் 19 கொரோனா வைரஸ் பரவுவதில் விரைவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை நாம் கண்கூடாகக் கண்டோம். உலகின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு இவ்வளவு வேகமாக எந்த ஒரு நோயும் வரலாற்றில் பரவியிருக்காது. 2019இல் சீனாவில் இந்த நோய் தோன்றிய பிறகு, அது விரைவில் உலகம் முழுவதையும் பாதிக்கும் ஒரு தொற்றுநோயாக மாறியது. ஆம். COVID-19 தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகளில் அப்பட்டமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இப்போதாவது நாம் கவனமுடன் செயல்படவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதன் தீவிரத்தைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டியுள்ளது. இதற்காகத்தான் இந்த டிசம்பர் 27ஆம் தேதியை ஒதுக்கியுள்ளது ஐ.நா. நிறுவனம். தொற்று நோய்களை எதிர்ப்பதற்கான தயாரிப்புத் திட்டங்களைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். முதலில் நமக்குத் தெரிவது, தடுப்பூசி திட்டங்கள். தொற்று நோய்களைத் தடுப்பதில் தடுப்பூசி திட்டங்கள் மூலக்கல்லாகும். பெரியம்மை போன்ற நோய்களின் உலகளாவிய வெற்றிக் கதைகள் நோய் ஒழிப்பில் தடுப்பூசி பிரச்சாரங்களின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன. இது தவிர,

தொற்றுநோய்களின் பரவலைக் குறைப்பதில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகள் மற்றும் தயார்நிலை நடவடிக்கைகள் முக்கியம். சுகாதார கல்வி மற்றும் சமூக ஈடுபாடும் இங்கு முக்கியப்பங்கு வகிக்கின்றது. தொற்றுநோய்களின் போது, ​​நோய் பரவாமல் தடுப்பதில் தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்குதான், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் தனிப்பட்ட உரிமைகளை மதிப்பதற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவது ஒரு நுட்பமான சவாலாக மாறுகின்றது.

பொது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தடுப்பூசி முயற்சிகளை ஆதரிப்பதன் மூலமும், சுகாதாரக் கல்வியை ஊக்குவிப்பதன் மூலமும், உலகளாவிய தொற்று நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான வளங்கள் மற்றும் ஆராய்ச்சி நிதியுதவியை அதிகரிப்பதன் மூலமும் தனிநபர்கள் தங்கள் பங்கை ஆற்றலாம்.

அடுத்து தனிப்பட்ட நம் பங்காக, தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்க கிருமி நாசினி மரங்களை வளர்க்கலாம். தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்க இயற்கையாகவே கிருமி நாசினியாக செயல்படும் மரங்கள், தாவரங்களை வளர்த்து எதிர்கால தலைமுறையினருக்கு பரிசாகக் கொடுக்கலாம். அதாவது, வேதிப்பொருள் கலந்த கிருமி நாசினிகளுக்குப் பதிலாக இயற்கையாகவே கிருமி நாசினி தன்மை கொண்ட வேம்பு, வில்வம், மா, நுணா, புங்கம், நொச்சி போன்ற மரங்களை அதிகளவில் வளர்த்து வருங்கால சந்ததியினருக்கு நாம் பரிசாகக் கொடுக்கலாம்

மருத்துவத்துறையில் பார்மால்டிஹைட், குளுடரால்டிஹைட், ஆல்கஹால், ப்ளீச் எனப்படும் சோடியம் ஹைப்போ குளோரைட், குளோரின் டை ஆக்சைடு ஆகிய கிருமி நாசினிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கிருமி நாசினிகள் நீரை சுத்தம் செய்யவும், பல்வேறு பரப்புகளை தூய்மைப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் ஒவ்வாமை, தோல் நோயை ஏற்படுத்துதல், எளிதில் தீப்பிடிக்கும் தன்மை போன்ற பாதகங்களும் உள்ளன. ஆனால் பக்கவிளைவுகள் இல்லாத இயற்கையான கிருமி நாசினிகள் நம்மை சுற்றியுள்ள மரங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அதில் வேம்பு, கிருமி நாசினிகளின் முதன்மை மரமாகும். தொற்று நோயான காலரா, அம்மை நோய்களின் போது வேம்பு பல்வேறு வகைகளில் பயன்படுகிறது. கலாச்சாரம், பாரம்பரியத்துடன் தொடர்பு கொண்ட வேம்பின் பட்டைகள், இலைகள் ஆகியவை பரு, கொப்பளம், வைரஸ், பூஞ்சை, காளான் போன்ற கிருமிகளை கொல்கின்றன. வேப்ப மரத்தின் கொழுந்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நீரழிவு நோய், தொற்று நோய் கட்டுப்படும், இருமல் மூச்சிறைப்பும் சரி செய்யப்படும் என்கிறது அனுபவப் பாடம்.

மூங்கிலுக்கு அடுத்து ஆக்சிஜன் அதிகளவில் உற்பத்தி செய்வது புங்கம் மரம். இதன் விதை, எண்ணெய், பூ, இலை, தண்டுப்பட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் வேதிப்பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. புங்க இலை வயிற்றுப் புண்ணை குணப்படுத்துகிறது என்கின்றனர். மேலும், மாவிலையின் வாசம் நோய் கிருமிகளை கொன்று நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும். இதனாலேயே திருவிழா மற்றும் வீடுகளில் நடைபெறும் விழாக்களில் மாவிலை தோரணங்கள் கட்டுகின்றனர். மாங்கொழுந்தை மென்று சாப்பிட்டால் தொண்டை புண், வலி குணமாகும். மாமரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்படும் சாறு அஜீரணக் கோளாறு மற்றும் வயிற்றுப் போக்கிற்கு நல்ல தீர்வாகிறது.

இதற்கடுத்து வில்வ மரம் வருகிறது. ஆலயங்களில் ஸ்தல விருட்சமாக இருக்கும் வில்வத்தில் மருத்துவ குணம் அதிகம் உள்ளது. இதுதவிர, நுணா மரத்தை எரிப்பதால் வரும் புகை சிறந்த கிருமி நாசினியாகும். நொச்சியை சர்வரோக நிவாரணி என்றழைக்கின்றனர். இதனால் இயற்கையாகவே கிருமி நாசினியாக செயல்பட்டு விலை மதிப்புமிக்க சுவாசக் காற்றை வழங்கும் மரங்களை அட்சய பாத்திரமாக கருதி வளர்த்து வருங்கால சந்ததியினருக்கு பரிசாக கொடுக்கலாம்.

சில பொருட்களை பயன்படுத்துவதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலான கொசு விரட்டிகள், கொசுக்கள் நம்மை நோக்கி வராமல் தடுக்கும் என்பது உண்மை தான். ஆனால், அதில் உள்ள பொருள் என்ன என்பதை நாம் கவனமாகப் பார்க்க வேண்டும். ஏனென்றால், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களால் மூச்சுத்திணறல், உணர்வு இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகவே, இயற்கையான இடுபொருள் கொண்ட கொசு விரட்டிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றோம். மேலும், குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால், குழந்தைகளின் கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க உதவுவோம். அழுக்கான பொருட்களை தொட்டுவிட்டு, அப்படியே வாயில் கை வைக்கும் பழக்கம் குழந்தைகளிடம் இருக்கும். ஆகவே, கைகளுக்கு கையுறைகளை அணிவிக்கலாம் அல்லது அவ்வபோது வெந்நீர் கொண்டு சுத்தம் செய்யலாம். வீடு மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதைப் போல, குழந்தைகள் கையாளும் பொம்மைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு நமக்குரிய கடமைகளை நாமே ஆற்றி வந்தால் தொற்றுநோய் எதிர்ப்புப் போராட்டத்தில் நாமும் நம் பங்களிப்பை வழங்கலாம். வாழ்வோம், வளர்வோம். உடனிருப்பவர்களையும் வாழவைப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 December 2024, 10:32