சிரியா குழந்தைகள் சிரியா குழந்தைகள்  

சிரியாவின் குழந்தைகளுக்கு அமைதி வேண்டும் : யுனிசெஃப் அதிகாரி

சிரியாவில் அடிப்படைத் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வறுமை மேலும் அதிகரிப்பதைத் தடுக்க பெரிய அளவிலான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தையும் இவ்வறிக்கையில் கோரியுள்ளார் யுனிசெஃப் அதிகாரி.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சிரியாவில் ஏறக்குறைய 40 விழுக்காடு மருத்துவமனைகள் மற்றும் நல வசதிகள் பகுதியளவு அல்லது முழுமையாக செயல்படவில்லை என்றும், ஏறத்தாழ 1 கோடியே 36 இலட்சம் மக்கள் தண்ணீர், உடல்நலம் மற்றும் நலப்பணிகளும், 37 இலட்சம் குழந்தைகள் உட்பட 57  இலட்சம் மக்களுக்கு ஊட்டச்சத்து உதவி தேவைப்படுகின்றன என்றும் கூறியுள்ளது யுனிசெஃப் நிறுவனத்தின் அறிக்கை.

டிசம்பர் 18, புதன்கிழமை இன்று, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவுக்கான யுனிசெஃப் மாநில இயக்குநர் Edouard Beigbeder அவர்கள்,  சிரியாவின் தமஸ்கஸ், ஹோம்ஸ், ஹமா, அலெப்போ மற்றும் இட்லிப் உள்ளிட்ட பல நகரங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட வேளை, 14 ஆண்டுகாலப் போருக்குப் பிறகு சிரியக் குழந்தைகளின் அவல நிலையைத் தனது அறிக்கையொன்றில் எடுத்துரைத்துள்ளார்.

ஆயிரக்கணக்கான குழந்தைகள் மோதல்களுக்கு மத்தியில் வளர்ந்துள்ளனர என்றும், 75 இலச்சக் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது என்றும், 64 இலட்சக் குழந்தைகளுக்கு அவசர பாதுகாப்பு சேவைகள் தேவைப்படுகின்றன என்று அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், அங்குச் சவால்கள் இருந்தபோதிலும், சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கை உள்ளது என்றும், தொடர்ந்து உயிர்காக்கும் உதவிகளை யுனிசெஃப் நிறுவனம் வழங்கி வருகிறது என்றும் கூறியுள்ளார்.

சிரியாவில் குழந்தைகள் உரிமைகளில் கவனம் செலுத்தும் நம்பகமான அரசியல் மாற்றத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள  அவர், இளைஞர்களுக்கான நீடித்து நிலைக்கூடிய சேவைகளை உறுதி செய்வதற்கான விரைவான மீட்பு முயற்சிகளை ஆதரிக்குமாறு அனைத்துலகச் சமூகத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகளின் ஆபத்து ஒரு கொடிய அச்சுறுத்தலாக உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், 2020-ஆம் ஆண்டிலிருந்து 1,260 குழந்தைகள் இதன்காரணமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அண்மையில், குறைந்தது 11 குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

சிரியாவில் அடிப்படைத் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வறுமை மேலும் அதிகரிப்பதைத் தடுக்க பெரிய அளவிலான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தையும் இவ்வறிக்கையில் கோரியுள்ளார் யுனிசெஃப் அதிகாரி.

கூடுதலாக, அணைகள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு பற்றிய கவலைகள் உள்ளன, என்றும் போரால் அவை அழிக்கப்பட்டால் பேரழிவு தரும் மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கலாம் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவ்வதிகாரி, அமைதிக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் சிரியாவின் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும் நான்கு அத்தியாவசிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்துக் கட்சிகளையும் அனைத்துலகச் சமூகத்தையும் வலியுறுத்தி அவ்வறிக்கையை நிறைவுசெய்துள்ளார் Beigbeder.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2024, 12:34